ஐபிஎல் கிரிக்கெட்! லக்னோவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் அணி!

Photo of author

By Sakthi

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்று நடந்த 57 ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள், நேருக்கு நேர் சந்தித்தனர். காசு டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதனடிப்படையில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன்கில் மிகச் சிறப்பாக விளையாடி 63 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்திலிருந்தார். டேவிட் மில்லர் 26 ரன்களை எடுத்தார், ராகுல் திவாட்டியா 22 ரன்களுடன் களத்திலிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்தது லக்னோ. குஜராத் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் தன்னுடைய விக்கெட்டுகளை இழந்தது லக்னோ அணி.

கடைசியில் அந்த அணி 13.5 ஓவரில் 82 ரன்னுக்கு சுருண்டது, தீபக் ஹூடா அதிகபட்சமாக 27 ரன்களை சேர்த்தார். இதன் மூலமாக 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. இதனால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் அணி.

குஜராத் அணியின் சார்பாக ரஷித் கான் 4 விக்கெட்டுகளையும், தயாள், சாய் கிஷோர், உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர் ஆட்டநாயகன் விருதை சுப்மன் கில் தட்டிச் சென்றார்.