சகோதரனை கண்டித்த அக்கா! விபரீத முடிவையெடுத்த புதுமாப்பிள்ளை!

Photo of author

By Sakthi

சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் விஜயன் கால்டாக்சி ஓட்டுநரான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இப்படியான நிலையில், புது மாப்பிள்ளையான விஜயன் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு தன்னுடைய சகோதரியின் வீட்டிற்கு விருந்திற்காக சென்றிருக்கிறார். விருந்துக்கு சென்ற இடத்திலும் மதுபோதையில் அவர் தள்ளாடியதாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து திருமணமாகியும் மதுப்பழக்கத்தை கைவிடவில்லையா? என்று விஜயனின் சகோதரி கண்டித்திருக்கிறார்.

இதன் காரணமாக, கோபமடைந்த விஜயன் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். அதன்பிறகு தன்னுடைய படுக்கை அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

வெகுநேரமாகியும் விஜயன் வெளியே வராத காரணத்தால், அவருடைய உறவினர்கள் கதவைத் தட்டியிருக்கிறார்கள். கதவு தட்டப்பட்டும் திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த சமயத்தில் அவர் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

இதுதொடர்பாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் விஜயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதோடு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.