ரஷ்யாவின் லூனா25 நிலவில் விழுந்ததில் 10 மீட்டர் பள்ளம் உருவானது!!! நாசா அறிவித்து உள்ளது!!!
ரஷ்யா நிலவுக்கு அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்ததில் 10 மீட்டர் அளவுக்கு விட்டம் கொண்ட பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கோஸ்மாஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி லூனா 25 என்ற விண்கலத்தை விண்ணில் அனுப்பியது.
ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவின் சுற்றுவட்டார பகுதிக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வெற்றிகரமாக நுழைந்தது. இதையடுத்து நிலவின் தென் துருவத்தில் லூனா 25 விண்கலத்தை ஆகஸ்ட் 21ம் தேதி தரையிரக்க ரஷ்யா விஞ்ஞானிகள் திட்டமிட்டு செயல்பட்டு வந்தனர்.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் வேகமாக விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவம் ரஷ்யா விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதில் 10 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளம் உருவாகியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. தற்பொழுது எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தை கடந்த 2020ம் ஆண்டு எடுத்த நிலவின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு நாசா வெளியிட்டுள்ளது.