அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூல்!! பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு!!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் – நீதிபதி.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த நந்தகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ராமநாதபுரம் ஆயிர வைசிய சபைக்கு சொந்தமாக மேல்நிலைப்பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி, கல்லூரி,உள்ளன. ஆண்டுக்கு கோடி ரூபாய் அளவில் வருமானம் ஈட்டி வருகிறது.
பரமக்குடியில் இயங்கி வரும் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு லட்சக்கணக்கில் டொனேஷன் கேட்டு பெற்றோரை வற்புறுத்துகின்றனர்.
அதோடு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் மற்றும் டொனேஷன் பெறும் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
தனியார் பள்ளியின் சார்பாக ஆஜரான அரசு நிர்ணயித்த தொகை மட்டுமே பள்ளியில் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி தண்டபாணி அரசு நிர்ணயித்த தொகைதான் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.