பிரபல ரவுடிகள் தங்களுடைய பிறந்தநாளை வாளால் வெட்டி கொண்டாடுவது கொண்டாடுவதுபோல் நடிகர் ஒருவர் வாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கடந்த 19ஆம் தேதி தனது பிறந்தநாளை தனது வீட்டின் முன் ஒரு பெரிய பந்தல் அமைத்து அதில் பிரம்மாண்டமான கேக் ஒன்றை வாளால் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருந்த போது அவர் மீது அந்த பகுதியில் உள்ளவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
நடிகர் துனியா விஜய் தனது வீட்டின் முன்னால் அனுமதி இல்லாமல் பந்தல் போட்டு பிறந்தநாள் கொண்டாடியதாகவும், வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் படியும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் நடிகர் துனியா விஜய்யை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்தனர். அப்போது நடிகர் துனியா விஜய் இது குறித்து விளக்கம் அளித்ததாக தெரிகிறது. ஆனால் இந்த விளக்கத்தில் திருப்தி அடையாத போலீசார் அவர் மீது பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துதல் வாளால் கேக் வெட்டி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாட வேண்டும் என விரும்பிய நடிகர் துனியா விஜய் தற்போது போலீஸ் வழக்கில் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.