டெல்லியில் இருந்து பெங்களூரு வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் அவசர கதவை குடிபோதையில் திறந்த பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 6E 308 விமானத்தில் பயணித்த உத்திர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரதிக், குடிபோதையில் தன் தலைக்கு மேலே இருந்த அவசர வழி கதவை திறக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக இதை கவனித்த விமான பணிப்பெண் இது குறித்து கேப்டனுக்கு தகவல் அளித்து, அந்தப் பயணியையும் எச்சரித்துள்ளார். விமானம் பெங்களூருவில் தரையிறங்கியவுடன் அவர் மது அருந்திய சோதனைக்கு பிரதீக் உட்படுத்தப்பட்டார்.
இதில் அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரசமும் இல்லை என தெரிவித்துள்ள இண்டிகோ விமான சேவை நிர்வாகம், அவரது செயல் குறித்து புகாராக அளித்து அவரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தது.
பிரதிக் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 336 (உயிர் அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து) மற்றும் 290 (பொதுத் தொல்லை) மற்றும் விமானச் சட்டம் 1934 இன் 11A (வழிகாட்டுதல்களை வேண்டுமென்றே பின்பற்றாதது) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
விமான நிலைய காவல் நிலையம் மற்றும் 41A Crpc இன் கீழ் நோட்டீஸ் அவருக்கு வழங்கப்பட்டது. இது நோட்டீஸ் வழங்கும் காவல்துறை அதிகாரியின் முன் அவர் ஆஜராக வேண்டும் மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இண்டிகோ விமானத்தின் அவசர கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தற்செயலாக திறந்த விவகாரம் விவாதப் பொருளாக இருந்து வரும் சூழலில் அதேபோன்ற செயலில் ஈடுபட்ட பயணி மீது மட்டும் வழக்கு பதிவு செய்திருப்பது சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது.