என்ஜினீயரிங் பாடத்திட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள மாற்றம்!

Photo of author

By Parthipan K

என்ஜினீயரிங் பாடத்திட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள மாற்றம்!

என்ஜினீயரிங் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் குழுவினர், தொழிற்சாலை மற்றும் தொழில் நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் பொன்முடி பேசுகையில், படித்து முடித்தவுடன் அவரவர் சார்ந்த தொழில்துறைகளில் பணிக்கு செல்கின்றனர். எனவே அதற்கு முன்பு, படிக்கும் போதே அதற்கான திறனை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

அவ்வாறு பாடத்திட்டம் மாற்றப்பட்ட பிறகு, மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்பதற்கு ஏற்ற வகையில், முதலில் என்ஜினீயரிங் துறை சார்ந்த பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேராசிரியர்களுக்கான இந்த பயிற்சி ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை அளிக்கப்பட உள்ளது.

பல்கலைகழகங்கள் அவர்களுக்கென்று தனிப்பாடத்திட்டத்தை உருவாக்குகிறார்கள். அவர்களையும் இதில் இணைத்து, அனைத்து என்ஜினீயரிங் சார்ந்த பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவிடம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, நிருபர்களிடம் அவர் கூறுகையில், நான்கு வருட என்ஜினீயரிங் படிப்புகளில் கடைசி ஆறு மாதத்தில் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று தொழில் பயிற்சி திறன்களை மாணவர்கள் வளர்த்து கொள்வதற்கு ஏற்றாற்போல் பாடத்திட்டத்தை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.