
நம் நாட்டில் தற்போது திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பு தள்ளிக்கொண்டே போகிறது. இதற்கு அவர்களின் உணவு பழக்கவழக்கம் காரணம் என்று சொன்னாலும் வயது மூப்பின் காரணமாக கூட குழந்தை பிறப்பு தள்ளிப்போவது காரணமாக சொல்லப்படுகிறது. நிறைய பேர் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொண்டு வேலைப்பளு மற்றும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கில் குழந்தை பிறப்பை தள்ளி வைப்பதால் அவர்கள் விரும்பும் நேரத்தில் அவர்களுக்கு குழந்தை கிடைப்பதில்லை.
இதனால் பலர் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிற நிலை ஏற்படும்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ராஜஸ்தானை சேர்ந்த ஒரு தம்பதியினர் திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். கடைசியாக வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவரை அணுகியுள்ளனர்.
இந்நிலயில் ஐதராபாத்தில் உள்ள நர்மதா என்னும் மருத்துவரை அணுகி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தையும் வாடகை தாய் மூலம் பிறந்துள்ளது. இந்த மருத்துவ சிகிச்சைக்கு 35 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார் மருத்துவர் நர்மதா. பிறந்த குழந்தையின் DNA வை பரிசோதனை செய்து பார்த்தபோது அந்த DNA வில் தந்தை மற்றும் தாய் இருவரின் மரபணுக்களும் ஒத்துப்போகவில்லை.
பின்னர் காவல்துறையில் புகார் அளித்து மருத்துவர் நர்மதா மற்றும் அவருடைய குழுவை சேர்ந்த 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த கும்பல் ஏழைகளை வாடகை தாய் முறைக்கும், விந்தணு தானத்திற்கும் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது. அருண் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான குற்றம் 23 படமும் இதேபோன்ற வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளை மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பலை பற்றிய கதை தான் இடம்பெற்றிருக்கும். படத்தை போன்ற ஒரு சம்பவம் நிஜத்தில் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.