தினம் ஒரு திருத்தலம்… வற்றாத ஊற்று… சகஸ்ர லிங்கம்..!!அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில்…!!
தினம் ஒரு திருத்தலம் இப்பகுதியில் நாம் இன்று அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க.ஈரோடு மாவட்டத்தில் உள்ள உதயகிரி என்னும் ஊரில் அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலுக்கு எப்படி செல்வது ஈரோட்டிலிருந்து சுமார் 43 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது.சித்திரை மாதத்தின் சில நாட்கள் சூரியன் மூலவர் மீது விழும் அற்புத காட்சியால், ஸ்ரீ உதயகிரி வேலாயுதசாமி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுவது சிறப்பு.அக்னி, வாயு உள்ளிட்ட பஞ்சலிங்களும், ஒரே மண்டபத்தில் வரிசையாக அமைந்துள்ளன.ஒரே லிங்கத்தில் 1008 லிங்கங்கள் அமைந்துள்ள சகஸ்ர லிங்கம் அமைந்துள்ளது இக்கோயிலின் சிறப்பாகும்.
காலபைரவர் தனி சன்னதியிலும், சனீஸ்வரர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோர் தனி சன்னதிகளிலும் எழுந்தருளிகின்றனர்.இக்கோயிலுக்கு அருகில் தாமரைக்குளம் உள்ளது. வற்றாத ஊற்றுடன் மலை மேல் அமைந்துள்ள இக்குளத்தில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பது சிறப்பான ஒன்றாகும்.இங்கு வலது புறத்தில் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயமும், இடது புறத்தில் ஸ்ரீ காசிவிசாலாட்சியும் எழுந்தருளிகின்றனர்.கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், திருக்கல்யாண மண்டபம், வாகன மண்டபம், அமுத மண்டபம் என ஆகம விதிப்படி ஒரு ஏக்கர் பரப்பளவில் முழுவதும் கற்களால் அமையப்பெற்றுள்ள பழமையான கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.
நில மட்டத்திற்கு கீழ், குகை போன்ற அமைப்பில் இத்திருக்கோயில் காணப்படுகிறது.தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானிடம் மனமுருகி எது வேண்டினாலும் அள்ளி கொடுப்பார் என்பது நம்பிக்கை.இத்திருக்கோயிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.