பணம் இல்லாமல் சிக்கன் ரசித்து ருசித்த நாய்! மீதி மனிதர்களுக்கா? ஹோட்டலுக்கு அதிகாரிகள் சீல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபல உணவு விடுதியில் நாய் ஒன்று சிக்கனை சாப்பிடும் வீடியோ வெளியாகி வைரலானதால் உணவு விடுதிக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தற்போது உணவகங்களில் கெட்டுப் போன உணவுகளை சாப்பிட்டு உயிரிழக்கும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கேரளாவில் இரண்டு பெண்கள் ஹோட்டலில் உணவு சாப்பிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். எனவே கெட்டுப்போன பழைய உணவு வகைகளை வைத்திருக்கும் உணவு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த இறைச்சியினை நாய் ஒன்று சாப்பிடும் வீடியோ பரவியது. இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபலமான உணவு விடுதி சமுத்ரா. இதற்கு அந்த மாவட்டத்தில் நான்கு கிளைகள் உள்ளன. அங்குள்ள ஜார்ஜ் ரோட்டு கிளையில் ஹோட்டல் ஊழியர்கள் ஷவர்மா சமைப்பதற்காக சிக்கனை வேக வைத்து வெளியே வைத்துள்ளனர். அப்போது சிக்கனை வெளியே வைத்துவிட்டு ஊழியர்கள் இல்லாமல் கவன குறைவாக இருந்துள்ளனர்.
அப்போது அந்த வழியே வந்த தெரு நாய் ஒன்று ஆளில்லாமல் இருந்த இடத்தில் வைத்திருந்த சிக்கனை ருசி பார்க்க தொடங்கியது. நாய் சிக்கனை சாப்பிட்ட வீடியோவை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டார். இதனால் அந்த உணவகத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. நாய் சாப்பிட்ட மீதியை மனிதர்கள் சாப்பிடுவதா? என்று மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோ பெரும் வைரலானதை அடுத்து மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்ஜார்ஜ் சாலையில் உள்ள அந்த உணவு விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். பிரபல உணவு விடுதியில் நடந்த இந்த கவனக்குறைவு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.