PMK: பாமகவின் உட்கட்சின் மோதலானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இதனை சரி கட்டும் முயற்சியில் மூத்த தலைகள் களமிறங்கினாலும் அதனை செவி கொடுத்து கேட்கும் நிலையில் இருவரும் இல்லை. இதனின் உச்சகட்டமாக சமீபத்தில் துணை பொதுச் செயலாளர் பதவியானது பாமக எம்எல்ஏ அருளுக்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால் அன்புமணி அதனை எதிர்த்து அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அன்புமணி நீக்கியது செல்லாது என ராமதாஸ் கோரி, அருள் கொறடா பதவியில் இருப்பதால் ஜிகே மணி மூலம் ஆளுநருக்கு கடிதம் அளித்துதான் நீக்க முடியும் என்ற விளக்கத்தையும் கூறியிருந்தார். இவ்வாறு நீக்குவதும் பொறுப்பு கொடுப்பதும் தொடர்ந்து செய்து வருவதால், யார்தான் தலைவர் என்பதே தெரியவில்லை. இந்நிலையில் இன்று தைலாபுரத்தில் ராமதாஸ் மாநில நிர்வாகிகளுடன் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இதில் கலந்துகொண்ட ஜிகே மணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவருக்கும் ஆடர் போடும் நோக்கில் அறிவுரை கூறியுள்ளார். கட்சியின் பிரச்சனைக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் உட்கார்ந்து பேச வேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும். இருவரும் தங்களுக்குள் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கி அமர்த்துவது இந்த பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வு கொண்டு வர முடியாது. அதேபோல இரு தலைவர்களும் ஒன்று சேர வேண்டும்.
இல்லையென்றால் அதல பாதாளத்திற்கு கட்சி சென்று விடும். இவர்களின் நடைமுறையை கண்டு தொண்டர்கள் நிர்வாகிகள் என அனைவரும் பெரும் வேதனையில் உள்ளனர். இதனால் கட்சி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும், பேசி சமாதானமாகும் பட்சத்தில் பழைய வேகத்துடன் கட்சி வளர்ச்சி அடையும். அதேபோல கொறடா பதவி ரீதியாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் இது சம்பந்தமாக எந்த ஒரு பிரச்சனையும் பெரிதாகாது. பாட்டாளி மக்கள் கட்சி உருவாகுவதற்கு காரணமாக இருந்தவர் ராமதாஸ் தான். அவர் இல்லாவிட்டால் இந்த கட்சி கிடையாது. இந்த காலகட்டத்தில் கட்சி வளர்ந்து நிற்பதற்கு அவர்தான் முக்கிய காரணம். அவர் காட்டும் வழியில் அனைவரும் நடக்க வேண்டும். மற்றொரு பக்கம் ராமதாஸையும் விட்டுக் கொடுக்காமல் அவர்தான் பாமகவின் முதல்வர் வேட்பாளர், மத்திய அமைச்சராக இருந்தபோது பல நலத்திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் பாமக அடுத்த கட்டத்திற்கு சென்றது.
அப்படி பார்க்கையில் இரு சக்திகளும் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும். இது நடைபெறவில்லை என்றால் கட்சிக்கு பெரும் இழப்பு உண்டாகும். இந்த பிளவுக்கு மாற்றுக் கட்சியினர் யாரும் காரணமாக இருக்க மாட்டார்கள், மாறாக உட்கட்சி மோதல் தான் உண்டாகும் என தெரிவித்தார்.