மீண்டும் ஒரு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளும் வழக்கம்போல செயல்பட தொடங்கியுள்ளது.
கடந்த மாதங்களில் பொங்கல் பண்டிகை என பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இம்மாதம் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்க உள்ளது. நேற்று முதல் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. பொதுவாகவே அந்தந்த மாவட்டத்தில் தலைவர்களின் பிறந்தநாள், திருவிழா என அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம் தான்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் மார்ச் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அடுத்த மாதம் ஏப்ரல் ஒன்றாம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் ஐயா வைகுண்டசாமி அவதார தினத்தையொட்டி வரும் மார்ச் 4 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 197 வது அவதார தினத்தையொட்டி மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் இன்று கஸ்தூரி விழா நடைபெறுகின்றது. அதனால் அந்த விழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்து கல்வித்துறை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.