ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டமா? அது ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி – ஜெயக்குமார் விமர்சனம்
இன்று சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தை ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் நிகழும் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் இன்று (டிச.21) காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தக் கூட்டம் ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, “ஓபிஎஸ் நடத்துவதை தனியார் நிறுவன கூட்டமாக தான் பார்க்க வேண்டும். அது ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி. இந்த கம்பெனியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் தான் அது. அது கட்சிக் கூட்டம் அல்ல என்று அவர் இந்த கூட்டம் குறித்து கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து, தேர்வு செய்யப்பட்டவர்களின் குழு கூட்டம் தான் அது. இதைக் கட்சி கூட்டமாக நாங்கள் கருதவில்லை. கட்சிக்கும் அவருக்கு சம்பந்தம் இல்லை. ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றுள்ள யாரும் அதிமுகவினர் கிடையாது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவர் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று எனக்கு வருத்தமாக உள்ளது. கூடா நட்பு கேடாய் முடியும். கட்சி எங்களிடம் தான் உள்ளது. நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். பொதுக் குழு நடத்துகிறோம். ஆனால் அவர்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை.” என்றும் அவர் அப்போது கூறினார்.