விமான நிலையத்தில் அமலாகும் புதிய வசதி! பயணிகள் இருந்த இடத்திலிருந்து வீடியோ மூலம் உடைமைகளை அடையாளம் காணலாம்!
தற்போது ரயில் மற்றும் விமான நிலையங்களில் புதுப்புது வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அண்மையில் சோதனை முயற்சியாக ரயில் நிலையத்தில் ஒளிபெருக்கியை நிறுத்திவிட்டு டிஜிட்டல் முறையில் ரயில்கள் எங்கு எப்போது.எந்த நேரத்தில் செல்லும் என காண்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று முதல் மீண்டும் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதங்களில் விமான நிலையத்தில் தியேட்டர் வசதி முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் பயணிகள் காத்திருப்போர் பகுதியில் இருந்தே அடையாளம் காணும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில் வெளிநாடு மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் தங்களது உடைமைகளை சம்பந்தப்பட்ட விமான நிறுவன அலுவலகத்தில் பதிவு செய்து அனுப்புவார். மேலும் அவ்வாறு அனுப்பப்படும் உடைமைகள் பாதுகாப்பு சோதனை முடிந்த பிறகு விமானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பாதுகாப்பு சோதனையின் போது அந்த உடைமைகளில் ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட பயணிகளை அழைத்து அதை வெளியே எடுக்க அறிவுறுத்தப்படுவார்கள்.
மேலும் தற்போது பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்தப் படியே தங்களது உடைமைகளை பயணிகள் அடையாளம் காணும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடியோ வாயிலாக குழந்தைகளை அடையாளப்படுத்தி அவர்கள் அனுமதியுடன் அவர்கள் கண் முன்பே தடை விதிக்கப்பட்ட பொருட்கள் அகற்றப்படும் இதன் மூலம் பயணிகளுக்கு நேரம் விரயம் குறையும் என கூறப்பட்டுள்ளது.