மனைவி மூலம் பிரச்சனை என்பது எல்லோருக்கும் பொதுவானது. சாமானியன் முதல் பெரும் பணக்காரர்கள் வரை இது பொருந்தும். நிறைய பணம் இருந்தும் மனைவியை சமாளிக்க முடியாமல் விவாகரத்து பெற்றவர்கள் பலரும் இருக்கிறார்கள். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு என்பது பல இடங்களில் காரணமாக இருந்தாலும் பெண்கள் மிகவும் ஆக்ரோஷமாக சண்டை போடுபவர்களாகவே இருக்கிறார்கள். இதை காமெடியாக பல மீம்ஸ்களிலும் பார்க்க முடியும்.
பொண்டாட்டியை சமாளிக்க முடியவில்லை என்கிற கருத்து பல திரைப்படங்களிலும் காட்சிப்படுத்தப்படுகிறது. ஏனெனில், எல்லோருக்கும் பொதுவான கருத்தாக அது இருக்கிறது. இது காமெடியாக பார்க்கப்பட்டாலும் பல குடும்பங்களில் இது சீரியஸான பிரச்சனையாகவே இருக்கிறது. மனைவியின் சுபாவத்தையும், அவரின் மனநிலையையும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்பவர்கள் குடும்பத்தை ஓட்டி சமாளிக்கிறார்கள்.
இது இல்லாதவர்கள் மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அல்லது மனைவியை பிரிந்து வாழ்கிறார்கள். பெண்ணுக்குள் தெய்வமும் உண்டு, பேயும் உண்டு என நகைச்சுவையாக சொல்வார்கள். இந்நிலையில்தான் தன் மனைவி ஒரு பேய் என ஒரு போலீஸ் அதிகாரியே சொல்லியிருப்பது பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது. பொதுவாக போலீஸ் அதிகாரிகள் தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், உத்தர பிரதேசத்தில் நடந்திருப்பது வேறாக இருக்கிறது.
காலைப்பணிக்கு தாமதமாக ஒரு காவலர் செல்ல அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் உயர் அதிகாரி. அதற்கு காவலர் அளித்த விளக்கத்தில் ‘ என் மனைவி ஒரு பேய். என்னை கொலை செய்ய துடிக்கிறார். என் ரத்தத்தை குடிக்கிறார். அவரால் எனக்கு கொடுங்கனவுகள் வருகிறது. அவர் செய்யும் பிரச்சனைகளால் என்னால் இரவு தூங்கவே முடியவில்லை. வாழ்வதிலேயே நம்பிக்கை இழந்துவிட்டேன். ஆன்மிக முக்திக்கு செல்ல எனக்கு வழிகாட்டுங்கள்’ என புலம்பியிருக்கிறார்.