பிரதமரை பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கைது
பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் அவதூறாக பேசிய மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த அவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் ராஜா பட்டேரியா, அரசியல் சாசனத்தை காப்பாற்ற பிரதமரை கொலை செய்ய வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பதிவாகியிருந்தது. ஆனால் அவரே அதில் கொலை செய்ய வேண்டுமென்றால் பிரதமரை தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்று அதில் விளக்கிக் கூறியிருந்தார். இருப்பினும் பிரதமரை கொலை செய்ய வேண்டும் என்ற வகையில் பேசிய இந்த வீடியோ தொடர்பாக பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் நேற்று பட்டேரியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வீடியோ குறித்து காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, மோடி தேர்தல் நடைமுறைகளை அழித்துவிடுவார். அவர் மதத்தாலும், சாதியாலும், மொழியாலும் எல்லோரையும் பிரிப்பார். தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற நினைத்தால் மோடியைக் கொல்லுங்கள். அதாவது அவரை தோற்கடியுங்கள்” என்று தான் பட்டேரியா பேசியிருந்தார் என இந்த வீடியோ விவகாரம் குறித்து விளக்கினார்.
ஆனாலும் பன்னா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்துவோரின் உண்மை முகம் வெளிவந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.