கோவை கோட்டைமேடு பகுதியில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினரின் விசாரணை தீவிரமடைந்திருக்கிறது வெறிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பலரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
வழக்கு விசாரணையானது தேசிய புலனாய்வு அமைப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் வேறு எந்த அசம்பாவிதமும் நடந்து விடுமோ என்ற அச்ச உணர்வு கோவை மக்களிடையே இருந்து வருகிறது.
அதற்கேற்றவாறு காவல்துறையினர் நடத்தியதை சாரணையில் கோவை தொடர்வண்டி நிலையம் காவல்துறை ஆணையர் அலுவலகம் ரேஸ்கோர்ஸ் விக்டோரியா ஹால் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் வைப்பதற்கு முயற்சி நடந்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
ஆகவே இந்த பகுதிகளில் வசிப்போம், கடைகள் நடத்துவோர் மற்றும் நாள்தோறும் வந்து செல்போர் ஒருவித பயத்துடன் இருக்கிறார்கள்.
ரேஸ் கோர்ஸ் சுற்றுப்பகுதியில் குடியிருப்போர் நலச்சங்கமான ராணா அமைப்பின் சார்பாக ரேஸ்கோர்ஸ் காவல்துறையினரை சந்தித்து தங்களுடைய பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது குடியிருப்பு வாசிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் காவல்துறையினர் வழங்கியிருக்கிறார்கள். இதுபோன்று வேறு சில குடியிருப்போர் அமைப்புகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பொதுமக்கள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மாநகர காவல் துறை எதிர்பார்க்கிறது. சில பொதுவான அறிவுறுத்தல்களையும் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. ஆகவே அவற்றை கடைப்பிடித்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு கோவை மக்களுக்கு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
கோவை நகரில் அமைதி திரும்பவும், நகரமும், தொழிலும், வளர்ச்சி அடையவும் அனைத்து சமுதாயத்தினரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பதே காவல்துறையினரின் கோரிக்கையாக இருக்கிறது.
காவல்துறையினரின் கோரிக்கை என்ன?
ஒரு இடத்தில் சில தினங்களாக அல்லது வெகுநேரமாக வாகனம் ஏதாவது நின்று கொண்டு இருந்தால் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அல்லது காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். அதனை திறக்கவோ, அருகில் சென்று ஆராய்ச்சி செய்யவோ கூடாது.
யாராவது ஒருவர் தொடர்ச்சியாக இருசக்கர வாகனத்தில் ஒரே பகுதியில் வலம் வந்தால் அந்த எண்ணை குறித்து வைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிப்பது மிகவும் அவசியம். ஒரு குடியிருப்பு பகுதியில் புதிதாக ஒருவர் குடியேறினால் அவரைப் பற்றி ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அதனை காவல்துறையினருடன் ரகசியமாக பகிர வேண்டும்.
காவல்துறையினரின் whatsapp எண்ணை பதிவு செய்து கொண்டு சந்தேகத்துக்கு இடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பாக படம் எடுத்து அதனை பகிர வேண்டும். அனைத்து குடியிருப்புகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தி அதனை மாநகர காவல் துறை இணையத்துடன் இணைக்க வேண்டும். தனி வீடுகளில் இருக்கின்ற சிசிடிவி கேமராக்களில் இத்தகைய மர்ம நபர்கள் நடமாட்டம் தொடர்பான காட்சிகள் இருந்தாலும் அதனை காவல்துறையுடன் பகிர வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறையினர் மக்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.