எடப்பாடி அருகே மரச்சாமான் கடையில் திடீர் தீ விபத்து!..பல லட்ச மரச்சாமான் பொருட்கள் எரிந்து நாசம்..நடந்தது என்ன?
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டியில் மரச்சாமான் கடை ஒன்று செயல் பட்டு வருகிறது.இந்த கடையை வளர்மதி கார்டன் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் சேகர் என்பவர் விற்பனை செய்து வருகிறார்.இவருடைய வயது 34 ஆகும். இந்நிலையில் இவர் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மரச்சாமான் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சேகர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கடையிலிருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் இதை பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கடுமையாக செயல்பட்டு தீயை அணைத்ததால் தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.இந்த தீ விபத்தால் மரக்கடையில் இருந்த மரச்சாமான்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் தீயினால் எரிந்து நாசமாயின.
இந்த சாம்பலான பொருட்களின் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மின்இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்து வருகிறது .