புகழ்பெற்ற மலைக்கோவிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து!! ஏராளமான பக்தர்கள் இறங்க முடியாமல் தவிப்பு!!
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் அங்கு மலை ஏறிச் சென்ற பக்தர்கள் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் அமைந்துள்ளது. புகழ் பெற்ற சிவன் மழைக் கோவிலான இங்கு அமாவாசை, பௌர்ணமி, மற்றும் மற்றும் மாத சிவராத்திரி, மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தற்போது ஆடி அமாவாசை மற்றும் சனி பிரதோசத்தை முன்னிட்டு இந்த கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதற்கு மக்கள் கலந்துக் கொள்ள மலையேறிச் செல்ல வனத்துறை சிறப்பு அனுமதி அளித்து இருந்தது.
இதில் விருதுநகர் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவனை தரிசனம் செய்ய தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். பின்னர் ,மலைபகுதி வழியாக கோவிலுக்கு நடந்துச் சென்றனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில், மலைப்பாதையை ஒட்டிய தவசிப்பாறை 5-வது பீட் வனப்பகுதியில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத் தீப்பற்றியது.
கடந்த 2 மாதங்களாக மழை மற்றும் போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் காட்டாறுகள் மற்றும் ஓடைகள் வறண்டு கிடந்தன. செடி, கொடிகள் காய்ந்து இருந்ததால் திடீரென காட்டுத் தீ பற்றி வேகமாக பரவியது.
இதன் காரணமாக நேற்று அமாவசை தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கீழே இறங்கி வர தடை விதிக்கப்பட்டு மலையில் உள்ள கோவில் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் கீழே இறங்கி வர முடியாமல் அவர்கள் தவித்தனர்.
சாப்டூர் வனசரகர் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், ஆகியோர் வனப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு நேற்று பரபரப்பு ஏற்பட்டது.