Aadhav Arjuna: நடிகர் விஜய் புதியதாக கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்த நாளிலிருந்து தமிழக அரசியலில் அவ்வப்போது பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்று முடிந்த பிறகு அவரின் அரசியல் நிலைப்பாடு ஓரளவு தெளிவானது.
மாநாட்டில் பேசிய விஜய் ஒரே நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளை சரமாரியாக விமர்சித்து பேசியது தமிழக அரசியலில் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இதிலும் திமுகவை நேரிடையாக எதிர்த்தது மட்டுமல்லாமல் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியில் பங்கு என்ற கருத்தை முன் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பேசியது திமுக கூட்டணியில் உள்ள விசிகவை தங்கள் பக்கம் இழுக்க தான் அப்போது தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மற்றும் திருமாவளவன் ஒரே மேடையில் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் பரவியது. விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் நிறுவனம் மற்றும் விகடன் பிரசுரம் இணைந்து தயாரித்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் இருவரும் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதைவைத்து பல்வேறு கூட்டணி யூகங்கள் ஊடகங்களில் வெளியானதால் திருமாவளவன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டார்.
ஆனால் திட்டமிட்டபடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய் புத்தகத்தின் முதல் பிரதியை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அதை பெற்றுக் கொண்டார். இதனையடுத்து விழாவில் பேசிய விஜய் திருமாவளவன் அவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது என திமுக தரப்பில் அழுத்தம் கொடுத்தது குறித்து மறைமுகமாக சாடி பேசியிருந்தார்.
அதே போல ஆத்வ் அர்ஜுன் பேசிய போது நடப்பது மன்னராட்சி என்றும் அதை 2026 தேர்தலில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பேசியிருந்தார். மேலும் அவர் பிறப்பால் இனி யாரும் முதல்வர் ஆக கூடாது என்று பேசியது தற்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை விமர்சிக்கும் வகையில் அமைந்தது. இதை விசிக நிர்வாகிகள் பலரும் எதிர்த்து கருத்து தெரிவித்த நிலையில் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.இதனால் திமுக விசிக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன் வழக்கம் போல கூட்டணிக்கு சாதகமாகவே கருத்து தெரிவித்தது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஆதவ் அர்ஜுன் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று பேசியதை திருமாவளவன் மறுத்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல அவர் நடத்திய மது ஒழிப்பு மாநாடு கூட அவரின் தோழமை சுட்டல் மாடலில் தான் நடந்து முடிந்தது.
இந்நிலையில் தற்போது கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியின் நலன் கருதி பேசிய கருத்தை அது அவருடைய சொந்த கருத்து என மடை மாற்றும் வகையில் பேசியது திருமாவளவனின் இயலாமையை காட்டுவதாக தான் அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அடங்க மறு அத்துமீறு என தங்கள் கட்சி தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தவர் தற்போது அடங்க மறுத்து கருத்து தெரிவித்த குட்டி சிறுத்தை ஆதவ் அர்ஜுன் கருத்தை ஆதரிக்காமல் கூட்டணி தலைமையிடம் பெட்டி பாம்பாய் அடங்கி விட்டாரே என தாய் சிறுத்தையான திருமாவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.