ஆடி அமாவாசை விரதம்!

Photo of author

By Sakthi

ஆடி அமாவாசை விரதம்!

Sakthi

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்து கொண்டிருந்தாலும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசையன்று விரதம் இருந்து நம்முடைய முன்னோர்களை வழிபாடு செய்தால் வாழ்வில் பல சிறப்புகளை நாம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆடி அமாவாசையன்று ஆற்றிலோ அல்லது குளத்திலோ குளித்துவிட்டு இறந்துபோன முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தற்சமயம் நோய்த்தொற்று வருடங்கள் இருப்பதால் கோவில்கள் மூடப்பட்டிருக்கிறது. ஆகவே வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம் அதன் பின்னர் முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு மிகப் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட ஒரு சிலருக்காவது அன்னதானம் வழங்கலாம்.

அமாவாசை தினத்தன்று வீட்டில் பெண்கள் நீராடிவிட்டு காலை உணவு சாப்பிடாமல் இறந்துபோன முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும், தயார் செய்வார்கள். அன்றைய தினம் சமையலில் எந்த விதமான காய்கறிகளும் இடம் பெற வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

விரதம் இருப்பவர்கள் காலையில் எதுவுமே சாப்பிடாமல் இருந்து அதன் பின்னர் எத்தனை நபர்களை வணங்க வேண்டும் அத்தனை இலைகளைப் போட்டு சமைத்த அனைத்து உணவுகளையும் மற்றும் பதார்த்தங்களையும் படைத்து துணிகளை வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து அகல் விளக்கை ஏற்றி வைத்து தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்துக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். அதன்பின்னர் படைத்த அனைத்து உணவுகளையும், பதார்த்தங்களையும், தனித்தனியாக இலையுடன் எடுத்து வீட்டிற்கு வெளியே மிக உயரமான இடத்தில் வைத்துவிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

முன்னோர்களுக்கு படைக்கப்பட்டு வைக்கும் உணவுகளை காக்கைகள் மட்டுமே உண்ண வேண்டும் என்பதால் தான் மிக உயரமான இடத்தில் வைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. காக்கைகள் உண்ட பின்னர் வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவு முறைகளுக்கு ஏற்றவாறு உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.

ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம் இரவில் பால், பழம் அல்லது இட்லி, தோசை போன்ற உணவுகளை சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது. முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகமாக பின்பற்றப்படுகிறது.