பாமகவை பின்பற்றும் ஆம் ஆத்மி கட்சி! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்

Photo of author

By Ammasi Manickam

பாமகவை பின்பற்றும் ஆம் ஆத்மி கட்சி! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்

தற்போது டெல்லியில் ஆட்சி செய்து வரும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக் காலம் வருகின்ற பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அங்கு புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.70 உறுப்பினர்களைக் கொண்டுள்ள டெல்லி சட்டப்பேரவைக்கு வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 14.01.2020 ஆம் தேதி காலை 11.00 மணி தொடங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஜனவரி 21 ஆம் தேதியான இன்று தான் கடைசி நாள் ஆகும். இதனையடுத்து வேட்பு மனு மீதான பரிசீலனை வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியிட விருப்பம் இல்லாதவர்கள் வேட்பு மனுவை திரும்ப பெற ஜனவரி 24 ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவானது வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிப்ரவரி 11 ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லி அரசியல் நிலவரம் சூடு பிடித்துள்ளது.நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான அரவிந்த் கெர்ஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

இதற்காக அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்  இலவசக் கல்வி, மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி, தடையில்லா மின்சாரம், பெண்களுக்கு பாதுகாப்பு போன்ற 10 வாக்குறுதிகளை அளித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட பல சலுகைகள் தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியுள்ள தேர்தல் வாக்குறுதியில் ஏற்கனவே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வழங்கியுள்ள வாக்குறுதிகளில் பல ஏற்கனவே பாமக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “தில்லி சட்டமன்ற தேர்தலுக்கான ஆம்ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 10 வாக்குறுதிகளில் இலவசக் கல்வி, மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி, தடையில்லா மின்சாரம், பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பெரும்பான்மையான வாக்குறுதிகள் பாமகவால் ஏற்கனவே வழங்கப்பட்டவை என்பதில் மகிழ்ச்சி!” என்று அவர் தெரிவித்துள்ளார்.