சுகாதாரமற்ற முறையில் ஆவின் பால்பாக்கெட் தயாரிப்பதாக குற்றச்சாட்டு:! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அரசாங்கத்திற்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனைக்கு வருவதற்கு முன்பு பல்வேறு நிலையங்களில் 19 வகையான பரிசோதனை செய்யப்பட்டு பாலின் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இந்த பால் பாக்கெட்டுகள் ஆவின் நிறுவனத்தில் இருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள டீலர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
பின்னர் டீலர்கள் அவர்கள் பகுதியில் உள்ள பால் விற்பனை நிலையம் மற்றும் மளிகை கடைக்கு பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்கின்றனர்.
இவ்வாறு கோயம்பேடு
திருவீதி அம்மன் கோவில் தெருவில் உள்ள மளிகை கடையில் கடந்த 29ஆம் தேதியன்று ஆவின் நைஸ் பால் பாக்கெட்டை வாடிக்கையாளர் ஒருவர் வாங்கி சென்றுள்ளார்.அந்தப் பாலில் பூச்சி போன்ற ஒரு பொருள் கருப்பு நிறத்தில் இருப்பது தெரிந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர் இதை கடை உரிமையாளரிடம் காண்பித்துள்ளார்.அப்போது அவர் அந்த பால் பாக்கெட்டை வாங்கி கொண்டு மற்றொரு பால் பாக்கெட்டை கொடுத்துள்ளார்.இருப்பினும் அந்த வாடிக்கையாளர் அரசாங்கத்திற்கு சொந்தமான ஆவின் பால் பாக்கெட்டை வாங்கி செல்லாமல் தனியார் நிறுவனத்தின் பாக்கெட்டை வாங்கி சென்றுள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் பால் பாக்கெட்டில் இதுபோன்ற சுகாதாரமற்ற நிலையில் விநியோகிக்கப்படுவது, அரசாங்க அதிகாரிகளின் மெத்தன தன்மையை காட்டுகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.