தலைமையை விமர்சித்ததால் அதிமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! முன்னாள் அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம்!

Photo of author

By Sakthi

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்த கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் அன்வர் ராஜா அண்மையில் அந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக சில கருத்துக்களை வெளியிட்டார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஒருமையில் பேசும் காணொளிப்பதிவு பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இது கடந்த 24ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிரொலித்தது. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகதிற்கும், அன்வர்ராஜாவிற்கும், இடையே கடுமையான வாக்குவாதம் உண்டானது. இது அதிமுகவினர் இடையே மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறிப்போனது. அன்வர்ராஜா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவிலிருந்து அன்வர் ராஜாவை நீக்கி அந்த கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இது தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

அதிமுகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கும், முரணான விதத்தில் செயல்பட்டது, ஆளும் கட்சியின் நற்பெயருக்கு மாசு உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் தொடர்பாக கட்சியின் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துக்களை தெரிவித்து கட்சிக்கு களங்கம் மற்றும் அவப்பெயர் உள்ளிட்டவற்றை உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளருமான அன்வர்ராஜா இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில், அன்வர்ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.