அதிரடியில் இறங்கிய முதல்வர்! 5 மாவட்டங்களில் ஆய்வு!

Photo of author

By Sakthi

கடந்த காலங்களில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில் இந்த நோய் தொடரின் முதல் அலை மிக வேகமாக பரவி வந்தது.அதனை கட்டுப்படுத்தும் விதமாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வந்தா.ர் அதன் விளைவாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சரியாக இயங்க தொடங்கின. அதோடு நோய்த்தொற்று இருப்பவர்களுக்கும் உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டது. இதனால் அப்போது இந்த நோய்த்தொற்று வெகுவாக கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

ஆனால் கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட அன்றிலிருந்தே நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவ தொடங்கியது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் எதற்கும் பலன் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தும் பணி மிக தீவிரமாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதேவேளையில் தடுப்பு பணிகளும் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. என்னதான் மாநிலம் முழுவதும் தடுப்பூசிகள் போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்றாலும் அந்த ஊசி போட்டுக் கொண்ட ஒரு சிலர் உடலில் இருந்த மற்ற உபாதைகள் காரணமாக உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தது. அதனால் பொதுமக்கள் இதனை போட்டுக் கொள்வதற்கு மிகுந்த அச்சப்படுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், 18 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருப்பூரில் தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து 8:30 மணி அளவில் விமானம் மூலமாக கிளம்பிய ஸ்டாலின் சேலம் சென்று அங்கே நோய்த்தொற்று பரவல் தடுப்பு பணி குறித்து பல கட்ட ஆய்வுகளை செய்ய இருக்கிறார். அதன் பின்னர் அங்கே இருக்கின்ற மருத்துவமனைகளில் ஆய்வு நடத்த இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதன்பிறகு திருப்பூர் வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலின் சுமார் 12 15 மணியளவில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை ஆரம்பித்து வைப்பதாக சொல்லப்படுகிறது.இதன் பின்னரும் கோயமுத்தூர் செல்லும் முதலமைச்சர் அங்கே கொடிசியா வளாகம், குமரகுரு கல்லூரி போன்ற இடங்களில் ஆய்வு செய்கிறார். அதனை முடித்துக் கொண்டு இன்று இரவு விமானம் மூலமாக மதுரைக்கு செல்லும் ஸ்டாலின் சர்க்யூட் ஹவுசில் ஓய்வெடுக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து நாளை காலை மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின், அதன்பிறகு தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தில் ஆய்வு செய்ய இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு நாளை மதியம் திருச்சி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே என் சி மருத்துவமனையில் ஆய்வு செய்துவிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார். இதனை தொடர்ந்து மாலை 6 15 மணிக்கு சென்னை திரும்ப இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.