அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி முடிவு!

Photo of author

By Sakthi

சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதேசமயம் நேற்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூரில் நடைபெற்ற பாஜகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினராக இருந்த சோழவந்தான் மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.

இந்த சம்பவம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உங்கள் கருத்துக்களை சொல்லலாம் என்று தெரிவித்த உடன் சசிகலாவுக்கு ஆதரவாகவும், கட்சி தலைமையை விமர்சனம் செய்து பேசி வரும் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மைக் பிடித்து பேச முயற்சி செய்தார், அப்போது கூட்டத்தில் இருந்த எல்லா மாவட்ட செயலாளர்களும் எழுந்து அன்வர் ராஜா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து கடிதம் வழங்கினோம். அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சற்றே காட்டமாக அதிமுக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து பேசிவிட்டு கூட்டத்திற்கு வந்திருக்கிறார், அவருக்கு தலைமை மீது பயம் இல்லை இனி தலைமையை விமர்சித்து பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அன்வர்ராஜா எழுந்துநின்று மன்னிப்பு கேட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்துகொண்டார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றும்போது, அனைத்து முடிவுகளையும் தலைமை எடுக்கும்போது வழிகாட்டுதல் குழு எதற்கு இந்த குழுவுக்கு அதிகாரத்தை வழங்கவில்லை என்றால் கலைத்து விடுங்கள் என தெரிவித்தார்.

வழிகாட்டு குழுவை நியமனம் செய்யும்போது பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி க்கும், இடையே யாருடைய ஆதரவாளர்களை அதிகம் இடம்பெற செய்யலாம் என்று போட்டி உண்டானது. ஆனால், இருவரது ஆதரவாளர்களும் ஏறக்குறைய சம அளவில் இடம் பெற்றிருந்தார்கள். இந்த சூழ்நிலையில், நேற்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆளுநரை சந்திக்க சென்ற சமயத்தில் தனக்கு மிகவும் நெருக்கமான, நம்பகமான, ஜேசிடி பிரபாகரை அழைத்து சென்று இருந்தார், பிரபாகரன் பன்னீர்செல்வத்தின் பட்டியல் மூலமாக வழிகாட்டும் குழுவில் இடம் பிடித்தவர் என்று சொல்லப்படுகிறது.

இதன் பின்னணியில்தான் வழிகாட்டும் குழுவையே கலைத்து விடலாம் என்ற கருத்தை செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். அதன் மூலமாக, வழிகாட்டு குழு உறுப்பினர்களை வைத்து பன்னீர்செல்வம் செய்துவரும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்கிறார்கள்.

அதேசமயம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இரு தலைவர்களும் பேசும் போது நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கின்றோம், எங்களுக்குள் எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் கிடையாது, எதிர்வரும் பேரூராட்சி மற்றும் நகராட்சி மாநகராட்சி தேர்தலில் கணிசமான பகுதி களில் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்காக எல்லோரும் ஒற்றுமையாக வேலை செய்யுங்கள் திமுகவின் குற்றங்களைக் கண்டு பிடித்து பொதுமக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார் என தெரிவிக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள்.