புதிய வகை நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

Photo of author

By Sakthi

ஒட்டுமொத்த உலகையும் சுமார் இரண்டாண்டு காலமாக அச்சுறுத்தி வரும் நோய்த்தொற்று தற்சமயம் உரு மாறி வீரியம் அடைந்து டெல்டா வகையாக பரவத் தொடங்கி, தற்சமயம் மறுபடியும் உருமாறி ஒமைக்ரான் தொற்றாக பயமுறுத்தி வருகிறது.

தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட இந்த நோய்த்தொற்று கடந்த 2ஆம் தேதி இந்தியாவிற்குள் நுழைந்தது, முதலில் கர்நாடகாவில் ஆரம்பித்து தற்சமயம் தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், புதுடெல்லி, என்று 17 மாநிலங்களில் ஊடுருவி விட்டது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 141 பேரும், டெல்லியில் 79 பேரும், கேரளாவில் 57 பேருக்கும், குஜராத்தில் 49 பேருக்கும், தெலுங்கானா மாநிலத்தில் 44 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 500 பேருக்கும், என்று இந்த புதிய வகை நோய் தொற்று பரவியிருக்கிறது.

இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பில் தமிழகம் 7வது இடத்தில் இருக்கிறது, பாதிக்கப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். சென்னையில் இருக்கின்ற மருத்துவமனைகளில் 22 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னும் இந்த புதிய வகை நோய் தொற்று அறிகுறியுடன் இருக்கின்ற 42 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய வகை நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார். அந்த சமயத்தில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பு அதிகம் இருக்கின்ற மாநிலங்களுக்கு பன்நோக்கு குழுக்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் புதிய வகை நோய்த்தொற்று பாதிப்பில் முதல் 10 இடங்களில் இருக்கின்ற மாநிலங்களுக்கு இந்த மத்திய பல்நோக்கு குழு வர உள்ளது. இதில் ஆறாவது இடத்தில் இருக்கின்ற தமிழ்நாட்டிற்கு நேற்று இரவு பன்னோக்கு குழு வந்து சேர்ந்தது. சென்னைக்கு விமானம் மூலமாக வந்த இந்த குழுவில் மத்திய சுகாதாரத்துறை வல்லுனர்களான மருத்துவர்கள் வினிதா புர்பசா, சந்தோஷ் குமார், தினேஷ் பாபு உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தார்கள்.