கரோனா பரவல் தொற்றினால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பெரும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
கரோனா பரவல் தடுப்பு பணிக்காக சேவை செய்யும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலர் பணியாற்றி வருகின்றனர். இதில் பணியாற்றுபவர்கள் கரோனாவால் உயிரிழந்து விட்டால், அவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் பணமும், அவர்களின் குடும்ப உறுப்பினரில் ஒருவருக்கு அரசு வேலை நியமனம் செய்வதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மேலும், காவல்துறையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளவர்களின் பட்டியல்களை விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்குமாறும், அவர்களின் குடும்பத்திலுள்ள வாரிசுகளுக்கு அரசுப் பணியை பெற்றுக்கொடுக்க டிஜிபி ஜேகே திரிபாதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக மாநகர மற்றும் நகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார்.
இதுவரை கருணா தொற்றினால் காவல்துறையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேரின் பட்டியல்களின் விவரங்கள் டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 பேரின் (விருதுநகர், மதுரை) விவரங்கள் இன்னும் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதனை விரைவில் அனுப்பி வைக்குமாறு அந்தந்த மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி ஜேகே திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.