சொத்து காரணமான கொலை வழக்கில் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு! ஏழு வருட காத்திருப்பு!

0
157
Action verdict handed down in property cause murder case! Seven years of waiting!
Action verdict handed down in property cause murder case! Seven years of waiting!

சொத்து காரணமான கொலை வழக்கில் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு! ஏழு வருட காத்திருப்பு!

சென்னை துரைப்பாக்கத்தில் இருந்தவர் பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா. இவர் அங்கேயே வசித்து வந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் டாக்டராக பணியாற்றி ஓய்வும் பெற்றிருந்தார். மேலும் அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து, காரை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு திரும்பும் வழியில் கூலிப் படையினரால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதன் காரணமாக பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிருக்கு போராடி வந்தார். அதன் பின்பு ஒன்பது நாட்கள் கழித்து சிகிச்சை பலனளிக்காமல் 23 ம் தேதி உயிரிழந்துவிட்டார். சுப்பையாவின் தாய் மாமாவான பெருமாள் என்பவருக்கு சொந்தமான 10 கோடி மதிப்பிலான இரண்டரை ஏக்கர் நிலம் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் உள்ளது.

இந்த நிலத்தை பெருமாள் தனது சகோதரியும், டாக்டர் சுப்பையாவின் தாயாருமான அன்னக்கிளி பெயரில் சொத்து எழுதி வைத்துள்ளார். இந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அன்னப்பழம் என்பவருக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக சிவில் வழக்கும் நடந்து வந்துள்ளது.

அன்னக்கிளி மற்றும் அன்னபழம் ஆகியோரை தொடர்ந்து அவரது பிள்ளைகளான டாக்டர் சுப்பையா மற்றும் ஆசிரியர் பொன்னுசாமி ஆகியோர் வரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்சினை நீடித்துக் கொண்டே இருந்தது. எனவே அன்னபழத்தின் குடும்பத்தினர் டாக்டரை கொன்றுவிட்டு அந்த நிலத்தை அபகரிக்க முடிவு செய்தனர். அதன்படி திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றி உள்ளனர். 2013 ம் ஆண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த கொலை வழக்கை அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கையில் எடுத்து விசாரித்து வந்தனர்.

ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், இவர்களது மகன்கள் வக்கீல் பாசில், என்ஜினீயர் போரிஸ், பாசிலின் நண்பர்களான வக்கீல் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், வில்லியமின் உதவியாளரான கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வப்பிரகாஷ், அய்யப்பன் என்ற ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தாரை சேர்ந்த 10 பேரை கைதும் செய்தனர்.

இந்த வழக்கில் கைதான அய்யப்பன் மட்டும் அப்ரூவர் ஆக மாறினார். இந்த வழக்கின் விசாரணை சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கை தினசரி விசாரணையின் அடிப்படையில் ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கடந்த மே 31-ஆம் தேதி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி தினம்தோறும் அந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீலாக என்.விஜயராஜ் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் பலரும் ஆஜரானார்கள். மொத்தம் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர் 173 ஆவணங்கள் 42 சான்றுப் பொருட்கள் விசாரிக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர் மற்றும் 7 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கானது 2015 ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டது. 250 முறைக்கும் மேலாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 7 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர். இந்த வழக்கு முடிவடையும் தருவாயில் அதன் நீதிபதியின் பதவி காலம் முடிவடைந்தது. அதன் காரணமாக டாக்டர் குடும்பத்தினர் அவரை பணி நீடிப்பு செய்து அவர் மூலமே தீர்ப்பு வழங்க நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

ஆனால் ஐகோர்ட் அவரின் பணிக்காலத்தை நீடிக்காமல், அந்த பணிஇடத்துக்கு வேறு ஒரு நீதிபதியை நியமித்து 2 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்க கடந்த மே மாதம் உத்தரவிட்டது. அதன்படி நீதிபதி அல்லியும் இந்த வழக்கு குறித்த அனைத்து தரவுகளையும், ஆவணங்களையும் சரிபார்த்து, அனைவரது வாதங்களையும் கேட்டு தீர்ப்பை வழங்கினார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறப்பட்ட நிலையில், விவரங்கள் மதியம் கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர். ஆசிரியர் பொன்னுசாமி, அவர்களது மகன் பாசில், போரிஸ், இவர்களது நண்பர்கள் வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஸ்குமார் ஆகியோருக்கு கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒரு தூக்கு தண்டனை, கூட்டு சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒரு தூக்கு தண்டனை என இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் கூலிப்படையைச் சேர்ந்த முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒரு தூக்கு தண்டனை, கூட்டு சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒரு தூக்கு தண்டனை, உள்நோக்கத்துடன் கூட்டு சதி செய்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒரு தூக்கு தண்டனை என 3 தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

அதேபோன்று மேரிபுஷ்பம், ஏசுராஜன் ஆகியோருக்கு கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், கூட்டு சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒரு ஆயுள் தண்டனைய என இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
9 பேருக்கும் மொத்தம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி, அபராதத்தை செலுத்த தவறும்பட்சத்தில் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அபராத தொகையில் ரூ.1 லட்சத்தை அரசுக்கு செலுத்தவும், மீதமுள்ள ரூ.9 லட்சத்தை சுப்பையாவின் மனைவி சாந்திக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கில் கைதான அய்யப்பன் அப்ரூவர் ஆனதால் எந்த தண்டனையும் இன்றி விடுவிக்கப்பட்டார். அதேவேளையில் தீர்ப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த டாக்டர் சுப்பையாவின் மனைவி சாந்தி, அவரது மகள் ஸ்வேதா, ஷிவானி ஆகியோர் ஆனந்தக்கண்ணீர் விட்டனர். தீர்ப்பு வழங்கப்படும் என்பதால் நேற்று கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீர்ப்பு வழங்கிய பின் குற்றவாளிகள் 9 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
Previous articleமுக்கிய கட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Next articleஅமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின் பட்டியல் இதோ!