தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவரை ஸ்டைலீஷ் ஸ்டார் எனவும், ஐகான் ஸ்டார் எனவும் ஆந்திர ரசிகர்கள் அழைக்கிறார்கள். 2003ம் வருடம் உருவான கங்கோத்ரி என்கிற படம் மூலம் அல்லு அர்ஜூன் நடிக்க துவங்கினார். அல்லு அர்ஜுன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர், தமிழ் படங்களை பார்த்து வளர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது.
இவரின் அப்பா அல்லு அர்விந்த் தெலுங்கு சினிமாவில் பெரிய தயாரிப்பாளராக இருந்தார். எனவே, துவக்கத்தில் மகனை வைத்து திரைப்படங்களை தயாரித்தார். காதல் கதைகளில் நடிக்க துவங்கி அதன்பின் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார். பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்.
இவருக்கென ஆந்திராவில் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் நடிப்பில் உருவான புஷ்பா படம் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் ஹிட் அடிக்கவே புஷ்பா 2 படம் உருவானது. இந்த படமும் பல மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து 1700 கோடி வசூல் செய்து இந்திய அளவில் சாதனை செய்துவிட்டது.
அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை அட்லி இயக்கவுள்ளார். பாலிவுட்டில் ஜவான் எனும் சூப்பர் ஹிட் படத்திற்கு பின் அட்லி இயக்கும் படம் இது. இந்த படத்தின் அறிவிப்பு அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான வருகிற 8ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், அல்லு அர்ஜுன் தனது பெயரில் சில மாற்றங்களை செய்யவிருக்கிறாராம். அது என்ன என்பது வருகிற 8, தேதி வெளியாகும் அறிவிப்பில் தெரிய வரும். சினிமா உலகில் நியூமராலஜி செண்டிமெண்ட் அதிகம் உண்டு. அதன்படியே அவர் பெயரை மாற்றி இருப்பார் என சொல்லப்படுகிறது.