Vadivelu: மதுரையை சேர்ந்த வடிவேலு பல திரைப்படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். ரசிகர்கள் இவருக்கு வைகைப்புயல் என்கிற பட்டமெல்லாம் கொடுத்தார்கள். பெரும்பாலும் கிராமத்து கதைகளில் அதிகம் நடித்திருக்கிறார். ஏனெனில், மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அந்த பாஷையை அழகாக பேசி திரையில் ஸ்கோர் செய்தார்.
கவுண்டமணி ரிட்டயர்ட் ஆகிவிடவே அவரின் இடத்திற்கு சந்தானம் வந்தார். ஆனால், வடிவேலு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 10 படங்கள் வெளியானால் அதில் 5 படங்களில் வடிவேலு இருந்தார். இவர் நடிப்பில் வெளிவந்த வின்னர், கிரி, தலைநகரம் உள்ளிட்ட சில படங்களில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. எனவே, கதாநாயகர்களை விட வடிவேலுவுக்கு அதிக ரசிகர்கள் உருவானார்கள்.
வடிவேலுவுக்காகவே படங்களை பார்க்கும் ரசிகர்களும் அதிகரித்தார்கள். ஆனால், ஒருகட்டத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கினார் வடிவேலு. அப்படி அவர் நடித்து வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பின் வெளியான படங்கள் ஓடவில்லை. அதோடு 24ம் புலிகேசி படத்தில் நடித்தபோது இயக்குனருடன் பிரச்சனை ஏற்பட்டு படத்திலிருந்து விலகினார். இதனால் வடிவேல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு அவர் மீது ரெட் கார்டு விதிக்கப்பட்டது.
எனவே, 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் வடிவேலு. அதன்பின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அந்த படமும் ஓடவில்லை. தற்போது மீண்டும் பழைய மாதிரி காமெடி வேடங்களில் நடிக்க துவங்கிவிட்டார். சுந்தர் சியுடன் கேங்கர்ஸ் என்கிற படத்திலும் கலக்கி இருக்கிறார்.
இந்நிலையில், எல்லாம் அவன் செயல், அழகர் மலை, புலி வேஷம், அவன் இவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஆர்.கே என அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் பேசும்போது ‘என்னுடைய படத்தில் நடிப்பதற்காக வடிவேலுவுக்கு ஒரு கோடி அட்வான்ஸ் கொடுத்தேன். இப்போது வரை அந்த பணம் அவரிடம்தான் இருக்கிறது. ஆனால், என்னுடன் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை. என்னுடைய படத்தில் அவர் காமெடி நடிகனாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது’ என பேசியிருக்கிறார்.