கிருஷ்ணகிரி அருகே தனது பூர்வீக கிராமத்தில் பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை , இலவசமாக வழங்கி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் நாச்சிக்குப்பம். நடிகர் ரஜினிகாந்த் மூதாதையர்கள், பெற்றோர்கள் இக்கிராமத்தில் வாழ்ந்துள்ளனர். இன்றைக்கும் ரஜினியின் உறவினர்கள், இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். தற்போதும், ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், உறவினர்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினி, தன் பூர்வீக கிராமத்தில் தனது பெற்றோர் இரானோஜிராவ் – இராம்பாய் நினைவகம் அமைப்பதற்காக 2.40 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இதற்காக அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் மூலம் அப்போதே அடிக்கல் நாட்டினார். நிலத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டது. ஆனால் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் அவரது இரசிகர்கள் பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை, இவ்விடத்தில் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நாச்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலத்தை இரஜினியின் அண்ணன் நேரடியாக பராமரித்து வருகிறார். தற்போது, இங்கு ரஜினியின் பெற்றோர் இரானோஜிராவ் – இராம்பாய் சிலைகளுடன் நினைவகம் கட்டப்பட்டுள்ளது. மேலும், கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், கால்நடைகளுக்கு தனியாக தண்ணீரும் வழங்கப்பட்டு வருகின்றது.
இதுதொடர்பாக ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கூறும்போது, கடந்த ஆண்டு(2022) டிச.8-ம் தேதி பெற்றோருக்கு நினைவகம் கட்டி முடிக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. கிராம மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் அமைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ரஜினிக்கு வீடியோக்கள், படங்கள் எடுத்து அனுப்பி வைத்தும், தகவல்கள் பரிமாறிக் கொள்கிறோம்.
இங்கு வர வேண்டும் என்கிற ஆசை அவருக்கும் உள்ளது. ஆனால் தொடர்ந்து படபிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் தள்ளி போகிறது. வரும் மே மாதத்திற்குள் ரஜினி இங்கு வருவார். மேலும் எதிர்காலத்தில் இவ்விடத்தில் முதியோர்களுக்கான இல்லமும், அனாதை குழந்தைகளுக்கான இல்லமும், நூலகமும் அமைக்க வேண்டும் என்பது எனது தம்பி ரஜினியின் நீண்டகால எண்ணமாகும்.
சில காலங்களில் கண்டிப்பாக இந்த ஊர் மக்களுக்கு பயன்படும் வகையில் பணிகளை செய்து முடிப்போம் மேலும் நான் அடிக்கடி இங்கு வந்து பணிகளையும் மேற்பார்வை செய்கிறேன் என்றார்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, ரஜினிகாந்த் எங்கள் ஊர்காரர் என்கிற பெருமையாக இருந்தாலும், இதுவரை அவர் ஒரு முறை கூட வரவில்லை என்பது பெரிய மனக்குறையாக தான் உள்ளது. தற்போது பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைக்கப்பட்டுள்ளதால், ரஜினி ஒருமுறையாவது வருவார் என நம்புகிறோம். மேலும் ரஜினிகாந்த் தன்னுடைய அறக்கட்டளை மூலம் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டி அமைத்துள்ளார்.
இது அக்கம் பக்கம் உள்ள சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. மேலும் அவ்வழியே மேய்ச்சலுக்காக ஆடு மாடுகளை ஓட்டிச் செல்லும் பொழுது அங்கே அனைத்து ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தண்ணீர் குடிக்கும் வகையில் 24 மணி நேரமும் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுவே இப்பகுதி மக்கள் மீதும் மற்ற உயிர்கள் மீதும் அவர்கள் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது என தெரிவித்தனர்.