பாரதிராஜா முதலில் இயக்கிய திரைப்படம் பதினாறு வயதினிலே. அந்த படம் உருவானபோது கமல் பெரிய ஸ்டாராக இருந்தார். ஆனால், அவரை கோமணம் கட்டி நடிக்க வைத்தார் பாரதிராஜா. ரஜினி அப்போது வளரும் நடிகர். அவரை வில்லனாக நடிக்க வைத்தார். ஸ்ரீதேவிக்கு அது இரண்டாவது திரைப்படம். படத்திற்கு இளையராஜா இசை. தமிழ் சினிமாவில் அப்படி ஒரு படம் அதுவரை வந்ததே இல்லை. குறிப்பாக முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாக பதினாறு வயதினிலே இருந்தது.
இந்த படத்தை பார்த்த வினியோகஸ்தர்களுக்கு படத்தின் மீது நம்பிக்கையே வரவில்லை. கமல் ஜாலியான பையன். அவனுக்கு வாயில் வெத்தல பாக்கு, கோமணமெல்லாம் கட்டி நடிக்க வச்சா படம் எப்படி ஓடும் என பின் வாங்கினார்கள். தொடர்ந்து பல வினியோகஸ்தர்கள் படம் பார்த்தும் யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை. எனவே, அப்செட்டில் இருந்தார் பாரதிராஜா. தயாரிப்பாளருக்கோ ‘போட்ட பணம் போச்சி’ என்கிற மனநிலை.

அப்போது கடவுள் போல வந்தவர்தான் ராஜ்கிரண். அப்போது அவர் வினியோகஸ்தர் மொய்தீன் காதர். படத்தை பார்த்த அவருக்கு படம் பிடித்துப்போனது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய ஏரியாக்களை வாங்கினார். இதை பாரதிராஜாவே நம்பவில்லை. ‘உண்மையாகத்தான் சொல்கிறீர்களா?’ என கேட்டிருக்கிறார்
‘அழகும் உடையும் முக்கியமில்லை. மனசுதான் முக்கியம் என இந்த படத்தில் காட்டியிருக்கிறீர்கள். கிராமம் முதல் நகரம் வரை எல்லா மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்த படம் கண்டிப்பாக ஓடும்’ என ராஜ்கிரண் சொல்ல அவரை அன்போடு கட்டியணைத்துக்கொண்டாராம் பாரதிராஜா. அப்படி நம்பிக்கை வைத்து ராஜ்கிரண் வாங்கி வெளியிட்ட பதினாறு வயதினிலே படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்து அவருக்கு நல்ல லாபத்தை பெற்று தந்தது.