நடிகர் விஜய் அரசியல் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தாரா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Photo of author

By Anand

நடிகர் விஜய் அரசியல் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தாரா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். அவ்வப்போது இவர் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வருவதும்,அதற்கு அவரது தந்தை விளக்கம் அளிப்பதும் பலமுறை நடந்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளதாக வெளியான தகவல் தவறானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்துக்குப் பிறகு அவருடைய அடுத்த படத்தை மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால்,தமிழகத்தில் திரையரங்குகள் இயங்கவில்லை. இதனையடுத்து தமிழ் திரையுலகில் வெளியாகவிருந்த பல படங்கள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள  மாஸ்டர் படத்தின் வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற கட்சியின் பெயரை நடிகர் விஜய் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியானது. ஏற்கனவே வருங்கால முதல்வரே என அவரது ரசிகர்கள் சில இடங்களில் போஸ்டர் ஒட்டி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த தகவல் அதை உறுதி செய்யும் வகையில் இருந்தது. இதையடுத்து நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்க தயாராகி விட்டார் என சமூக வலைத்தளங்களில் இந்த தகவலை பரப்பி அவரது ரசிகர்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக வெளியான தகவல் தவறானது என நடிகர் விஜய் அவர்களின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.