விஜய் சேதுபதி படப்பிடிப்பின் போது பத்திரிகையாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட விஜய் சேதுபதியே நேரில் வந்து சமாதானம் செய்த சம்பவம் திண்டுக்கல்லில் நிகழ்ந்தது.
தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் விஜய் சேதுபதி. அண்மையில் விஜய்யுடன் இணைந்து இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டு வருகின்றன.
அதில் ஒன்றாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. தற்பொழுது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்த நிலையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், முறையாக அனுமதி பெறாமல் இந்த படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த தனியார் ஊடகத்தின் பட்டிரிகையாளர் ஒருவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார். அப்பொழுது படக்குழுவை சேர்ந்த ஒருவர் செய்தியாளரை திட்டியதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் பிற பத்திரிகையாளர்களுக்கும் பரவ, அனைவரும் ஒன்று சேர்ந்து படக்குழுவை முற்றுகையிட்டனர். பத்திரிகையாளரை தரைக்குறைவாக பேசிய அந்த நபரை கைது செய்ய பிற பத்திரிகையாளர்கள் வலியுறுத்தினர். அப்பொழுது படக்குழுவில் உள்ள அனைவரும் ஒன்றிணைய இருத்தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இறுதியாக, பிரச்சனையை சமாளிக்க ஷூட்ங்கில் இருந்த விஜய் சேதுபதியே சம்பவ இடத்திற்கு வந்தார்.
இரு தரப்பினரிடமும் பேசி சமாதானம் செய்ய விஜய் சேதுபதி முயற்சிக்க அது முடியாமல் போனது. விஜய் சேதுபதியையும் முற்றுகையிட்டவர்கள் அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக அந்த இடத்தை விட்டு விஜய் சேதுபதி நகர, பத்திரிகையாளரிடம் சண்டையிட்ட படக்குழுவை சேர்ந்த அந்த நபரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
எனினும், கொரோனா பரவல் உள்ள சூழலில் முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் விஜய்சேதுபதி படக்குழுவுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தால் படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

