கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழப்பு! விளக்கம் அளித்த காவல்துறை!

Photo of author

By Sakthi

முதுகுளத்தூரை சார்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் இறப்புக்கான காரணம் தொடர்பாக தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம் கொடுத்திருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழி என்ற கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் இவர் காவல்துறையினரின் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதாக கடந்த நான்காம் தேதி கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவருடைய பெற்றோரை வரவழைத்து மணிகண்டனை காவல்துறையினர் அனுப்பி வைத்தார்கள். அன்று நள்ளிரவில் உடல் நலக்குறைவு காரணமாக, மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தார் .

காவல்துறையினரின் தாக்குதல் காரணமாக, தான் மணிகண்டன் உயிரிழந்தார் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து அவருடைய சகோதரர் அலெக்ஸ்பாண்டியன் காவல்துறையில் புகார் கொடுத்தார். அதேபோல இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். மணிகண்டனின் பெற்றோரின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த காவல்துறை மணிகண்டனை காவல்நிலையத்தில் வைத்து விசாரித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது.

இவை அனைத்தையும் ஏற்க மறுத்த மணிகண்டனின் தாயார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் மணிகண்டனின் உடலை மறு ஆய்வு செய்ய வேண்டும், அதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும், என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் அவருடைய உடல் மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மணிகண்டனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், மணிகண்டன் இறப்புக்கான காரணம் தொடர்பாக தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம் அளித்திருக்கிறார்.

மதுரையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் மாணவர் மணிகண்டனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது, அவரிடம் விசாரணை நடத்தியது, அவருடைய பெற்றோரை வரவைத்து விசாரணை செய்துவிட்டு மணிகண்டனை நல்லமுறையில் அனுப்பிவைத்தது, எல்லாமே காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அன்று நள்ளிரவில் மணிகண்டன் உயிரை இழந்து விடுகிறார் அவருடைய உயிரிழப்புக்கு காவல்துறை தான் காரணம் என்று அவருடைய சகோதரர் அலெக்ஸ்பாண்டியன் புகார் வழங்கினார்.

உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 8ஆம் தேதி மணிகண்டனின் உடல் மறு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. உடல் உறுப்பு பரிசோதனையின் கடைசி அறிக்கை நேற்று முன்தினம் வந்தது. அதில் மணிகண்டன் விஷம் அருந்தி உயிர் இருந்திருக்கிறார் என்பது தெளிவாக இருக்கிறது. காவல்துறையினர் தாக்கியோ, அல்லது அடித்தொ மணிகண்டன் உயிரிழக்கவில்லை என்பது இதன் மூலமாக தெளிவாக தெரிகிறது. இதன் காரணமாக, அவருடைய மரணம் தொடர்பாக இனி சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பகிர வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.

மணிகண்டன் வீட்டிலிருந்து விஷ பாட்டில் ஒன்று கைப்பற்றப்பட்டு இருக்கிறது இதன் காரணமாக, அவர் விஷம் குடித்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கமளித்திருக்கிறார்.