கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் பாமக தேமுதிக பாஜக தமாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. தேர்தல் முடிந்த பிறகும் அதிமுக தலைமையிலான இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது.
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது அதில் அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்களும் பாமகவுக்கு ஒன்றும் தேர்வு செய்யப்பட்டது. தேமுதிக தரப்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அடுத்த முறை தங்களுக்கும் வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் மாநிலங்களவையில் சில உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. இவற்றுள் தமிழகத்தில் இருந்து தேர்வாகி இருந்த ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிந்திருந்தது.
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் படி திமுகவுக்கு மூன்றும் அதிமுகவுக்கு மூன்றும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் திமுக தனது வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில் அதிமுக சார்பாக கே.பி.முனுசாமி தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியான தமாகவில் இருந்து ஜி.கே.வாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே வாய்ப்பு வழங்கும்படி பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் இந்த முடிவு அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.