அந்த 202 திட்டங்களை பட்டியலிட முடியுமா? முன்னாள் அமைச்சர் பரபரப்பு கேள்வி!

0
137

திமுக ஆட்சி பொறுப்பில் அமர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இது தமிழக மக்களிடமும் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் ஒரு சிலர் அட நம்ம ஸ்டாலினா இப்படி? என ஆச்சரியப்படும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

அதோடு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக அவருடைய இந்த செயல்பாடுகளை கண்டு சற்றே வெலவெலத்துப் போய் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் தமிழகத்தில் இதுவரையில் முதலமைச்சருக்கு எதிராக எந்த ஒரு நெகட்டிவ் இமேஜும் உருவாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும், அப்படி ஒரு நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்துவதற்கு தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சியின் சட்டசபை உறுப்பினர்களும் முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்றைய தினம் சி.பா ஆதித்தனார் பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டது இதனை தொடர்ந்து சென்னை எழும்பூரில் இருக்கின்ற அவருடைய திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருக்கின்ற திருவுருவ படத்திற்கு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மா.பா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது சின்ன பசங்க சொப்பு சாமான் வைத்து விளையாடுவது போல தான் தற்சமயம் தேர்தல் வாக்குறுதி ஆகிவிட்டது. பொதுமக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகள் எதையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், முதியோர் உதவித்தொகை உயர்வு, கல்வி கடன் ரத்து மற்றும் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் உள்ளிட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நகைக்கடன் தள்ளுபடி குழு அமைக்கப்பட்டு இருக்கிறது இந்த அரசை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக குழுக்களை மட்டும் அமைத்து கண்துடைப்பு காண வேலையை செய்துவருகிறது, கடலில் கரைத்த பெருங்காயம் போல அந்தோ கோவிந்தா தான் அதோடு அதை மறந்துவிட வேண்டியதுதான் என தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

இவர்களால் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை தெரிவித்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், பொது மக்கள் எதை எதிர்பார்த்து காத்திருந்து கொண்டிருக்கிறார்களோ அதை நிறைவேற்றவில்லை. 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக தங்கம் தென்னரசு வாய்கிழிய உரையாற்றுகிறார், நிறைவேற்றப்பட்டதாக சொல்லிக்கொண்டிருக்கும் 202 வாக்குறுதிகள் என்னென்ன என்று திமுக அரசு பட்டியலிட தயாரா? நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் தீர்மானம் கொண்டுவந்தால் அயோக்கியத்தனம் அதுவே அவர்கள் கொண்டு வந்தால் நல்லதா? என கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜெயக்குமார்.

ஆட்சிக்கு வந்தவுடனேயே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள் இதன் காரணமாக, மாணவர்கள் படிக்காமல் இருந்து விட்டார்கள் நீட் தேர்வு நடைபெற்றது, மூன்று மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டார்கள். இதற்கு முழுக்க, முழுக்க திமுக அரசுதான் முழு பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்.

இதனையடுத்து உரையாற்றிய அவர் தமிழ் நாட்டில் தொடர்ந்து வரும் கொலைகள், ரவுடிகளின் கைது, போன்றவை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை கண்கூடாக காட்டுகின்றது. அதிமுகவின் ஆட்சி காலத்தில் அமைதியான மாநிலமாக இருந்த தமிழகம் தற்சமயம் சீர்கெட்டு விட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தன்னுடைய குறுக்கு புத்தியினால் குறுக்கு வழியில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. மக்கள் பிரச்சனைகளை என்னுடைய அறைக்கு வந்து தெரிவிக்கலாம் என முதலமைச்சர் தேர்தல் சமயத்தில் கூறியிருந்தார்.

ஆனால் தமிழக மக்களே இன்று உங்களால் அவ்வாறு செல்ல முடியுமா? புகார் தெரிவிக்க வருபவர்கள் முதலமைச்சரின் வீட்டின் முன்பு தீக்குளிக்கும் நிலைதான் தற்சமயம் இருந்து வருகிறது, இது தான் திமுகவின் தலைமையிலான ஆட்சியின் அவல நிலை என தெரிவித்ததோடு கடந்த 5 மாத காலமாக மிகவும் அதில் பொதுமக்கள் இருந்து வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரையில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என்று சென்ற செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி வீடியோ மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Previous articleவானிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
Next articleபணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு