ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி விடுத்த கடுமையான எச்சரிக்கை!

Photo of author

By Sakthi

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், மற்றும் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் ,உள்ளிட்டோர் இன்று ஆலோசனை கூட்டம் முன்னரே அறிவித்தபடி நேற்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆரம்பித்து இரவு 10.45 மணி வரை நீடித்து இருக்கின்றது.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நிச்சயமாகிவிட்டதா? ரஜினி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கின்றதா ?என்ற கேள்விகளுக்கு இடையினில் நேற்றைய தினம் இந்த கூட்டம் நடந்திருக்கின்றது. கட்சியின் 31 மண்டல பொறுப்பாளர்கள், 73 மாவட்ட செயலாளர்கள், மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம் ,கே.பி. முனுசாமி ஆகியோருடன் அவைத்தலைவர் மதுசூதனன் பங்கேற்றார் கூட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் மதுசூதனன் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

கொஞ்ச நேரம் பொதுவான அறிவுறுத்தலுக்கு பின்னர் மண்டல வாரியாக நிர்வாகிகளை முதல்வர், மற்றும் துணை முதல்வர், இருவரும் சந்தித்தார்கள். மண்டல வாரியாக பொறுப்பாளர்கள், மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆகியோர் மட்டுமே இதில் பங்கேற்றார்கள் .

அந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு மண்டலத்திலும் இருக்கின்ற வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை எத்தனை, வாக்குச்சாவடியின் கமிட்டி உறுப்பினர்கள் விவரங்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 75 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அந்த கமிட்டியின் பெண்கள் 25 பேர் இருக்க வேண்டும் என முன்னரே அறிவுறுத்தியபடி பெண்கள் இணைக்கப்பட்டு இருக்கிறார்களா? என பரிசோதனை செய்தார்கள். பல மாவட்டத்தினர் உத்தேச பட்டியலை இன்னும் முழுமையாக தயார் செய்யவில்லை என்று கூட்டத்தில் தெரியவந்தது. இந்த மாத இறுதிக்குள் வாக்குச்சாவடி கமிட்டி பட்டியலை துல்லியமாக தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார்.

மண்டல வாரியாக நடைபெற்ற இந்த ஆலோசனை முடிவடைவதற்கு இரவு 10 .45 மணி ஆகிவிட்டது. ஆலோசனைக்கு முன்னரும், அதற்கு பின்னரும், உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,

நாம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது, ஆட்சிக்கு வந்தால் தான் பிரச்சனை இருக்காது, தோல்வியடைந்தால் அனைவருக்கும் பிரச்சனை தான், என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கின்றதோ அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்களுடைய கடமை அப்பொழுதுதான் நாம் நாளை நன்றாக இருக்கலாம் என்று தெரிவித்திருக்கின்றார்.

வாக்குச்சாவடி கமிட்டி பற்றிதான் நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு இருக்கின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.