சிலைக் கடத்தலில் தொடர்பா? தனியார் தொலைக்காட்சி மீது வழக்கா? அமைச்சர் அதிரடி முடிவு
தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தல் விவகாரத்தில் தங்களுக்குத் தொடர்பிருப்பதாக வந்துள்ள செய்தியில் உண்மையில்லை என்று ஆளும் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் தமிழகத்தில் நடைபெற்ற சிலைக் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக் கடத்தல் சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலைக் கடத்தல் விவகாரத்தில் இரண்டு அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட திமுக ஆதரவு பெற்ற கலைஞர் தொலைக்காட்சி, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தான் அந்த இரு அமைச்சர்கள் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நேற்று (ஜூலை 25) கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் இதைத் திட்டவட்டமாக மறுத்தனர்.
முதலில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “நானும், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் சிலைக் கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு பொய்யான தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். நாங்கள் சிலைக் கடத்தில் ஈடுபட்டதாகச் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் எந்த அறிக்கையையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. உண்மையில் சிலைக் கடத்தல் போன்ற வழக்குகளில் எங்களுக்குத் தொடர்புமில்லை. சிறப்பு அதிகாரி எந்தவோர் அறிக்கையும் தாக்கல் செய்யாத நிலையில், வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்வோடு இல்லாத ஒன்றைச் செய்தியாக வெளியிட்டுள்ளனர்.
தமிழக அரசின் மீது களங்கம் ஏற்படுத்தவும், தனிப்பட்ட முறையில் எங்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த பொய்ச் செய்தியைப் பரப்பியுள்ளனர். இதுதொடர்பாக சட்டரீதியாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். பிரஸ் கவுன்சிலிலும் புகார் அளிக்க உள்ளோம். கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி எந்தவித ஆதாரமுமில்லாமல் இந்தப் பொய் செய்திகளை வெளியிட்டதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சீனிவாசன், “சிலைக் கடத்தல் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் அதுகுறித்துப் பேசத் தேவையில்லை. ஆனால் எங்கள் இருவரின் புகைப்படத்தை வெளியிட்டு எங்களுக்குத் தொடர்பிருப்பதாக முழுப் பொய்யைச் சொல்லியுள்ளது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி. அமைச்சர்கள் என்றால் வேறு யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அது தமிழ்நாடாக இருக்கலாம். ஆந்திரம், கர்நாடகாவாகக் கூட இருக்கலாம். அதற்கு நாங்களா பொறுப்பு. எங்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால் மறுப்பு தெரிவித்தோம்” என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சேவூர் ராமச்சந்திரன், “மக்கள் மத்தியில் எங்கள் இருவரின் பெயரையும் களங்கப்படுத்துவதற்காக இந்த உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டுள்ளனர். எங்களுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்திய கலைஞர் தொலைக்காட்சி மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் தொடர்பான செய்தி வெளியிட தடை
இந்த நிலையில் சிலைக் கடத்தல் தொடர்பாகச் செய்திகள் வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நீதிபதி ஆனந்த வெங்கடேசன் பிறப்பித்துள்ள உத்தரவில், “இந்த வழக்கில் வருத்தத்திற்குரிய விஷயம் ஒன்று நடந்துள்ளது. நீதிமன்ற நடைமுறைகளை ஊடகங்களில் தவறாகத் திரித்து வெளியிடுவது தொடர் கதையாகியுள்ளது. இதுதொடர்பாக 24.7.2019 அன்று எங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய போதும், மீண்டும் இன்று அதுபோலவே செய்திகள் வெளியாகியுள்ளது. இதே நிலை தொடருமானால் இவ்வழக்கை நியாயமாக முடிப்பது மிகுந்த சிரமமான காரியமாகிவிடும்.
இதனால் இந்த விவகாரத்தைக் கையாள்வதை விட ஊடகங்களைக் கையாள்வதே பெரிய வேலையாகிவிடும். ஆகவே, இந்த வழக்கில் நீதிமன்ற நடைமுறைகளை அனைத்து வகையான ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அதுபோன்ற செய்திகளை நீதிமன்றத்தில் ஆதாரமாகவும் காட்ட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.