மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி

Photo of author

By Ammasi Manickam

மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி

சென்னையில் பள்ளி மாணவியிடம் மொபைல் போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் சீண்டல் செய்ததாக அதிமுக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வட சென்னை பகுதியான வண்ணாரப்பேட்டையிலுள்ள மாடல் லைன் பகுதியில் வசிக்கும் பாளையம் ரவி தற்போது அதிமுக கட்சியில் வட்டத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.68 வயதாகும் இவர் இதற்கு முன் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியாக இருந்தவர் நாளடைவில் கட்சி பொறுப்பிற்கு வந்துள்ளார்.

இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழில் செய்து வரும் இந்திராணி என்பவரின் மகள் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 13 வயதே ஆகும் அந்த மாணவி, ரவி தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தன்னிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாக அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 1089 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்ட மாணவியின் தாய் நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு இது குறித்து ரவி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரவி மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த மகளிர் காவல் துறையினர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரவியைக் கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் மாணவியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது காவல் துறையினருக்கு தெரிய வந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனை செய்த போது அவரிடம் பாலியல் ரீதியாக ஈடுபட்டது மருத்துவ அறிக்கையின் மூலமாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட ரவியை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து ஆளும் கட்சியான அதிமுகவில் இவர் பதவி வகிப்பதால் காவல்துறையினர் கைது செய்யாமல் விடுவித்து விடுவார்கள் என்று எண்ணி அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் என அனைவரும் கல்லறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மறியல் நடைபெற்ற பகுதிக்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி அங்கிருந்து கூட்டத்தைக் கலைத்தனர். இந்த மறியல் சம்பவத்தினால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேர அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.