திமுக செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது – முன்னாள் அமைச்சர் காமராஜ் காட்டம் 

0
145

திமுக செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது – முன்னாள் அமைச்சர் காமராஜ் காட்டம்

தற்போது தமிழகத்தில் திமுக அரசால் திறப்பு விழா நடத்தப்படும் அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என அதிமுகவின் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை அன்று அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது, அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக தற்போது குடும்பக் கட்சியாக செயல்பட்டு வருகிறது. சாதாரண மக்களுக்கான இயக்கமாக அதிமுக உள்ளது. ஜனநாயக முறைப்படியும், தாா்மீக அடிப்படையிலும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தோந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில் திமுக அரசால், செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் கடந்த அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டவை என்று கூறினார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கேள்வி எழுந்த போது, 98 சதவீதத்தினரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்தது. எம்ஜிஆா் திமுகவை எதிா்த்தாா் அதனால் அதிமுகவின் தலைவரானாா்.

அவரைத் தொடா்ந்து ஜெயலலிதாவும் திமுகவை எதிா்த்து தலைவரானாா். அதேவழியில், எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவை எதிா்த்து இடைக்கால பொதுச் செயலாளராக உள்ளாா். பெரியாா் சிலைக்கு சென்னையில் மாலை அணிவித்து விட்டு ஓபிஎஸ் வரும்போது, முன்னாள் அமைச்சா்களின் வீடுகளில் சோதனை நடக்கிறது என்ற கேள்விக்கு அரசு தன் கடமையை செய்கிறது என்கிறாா். இதை அவா் கூறலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் நிதி அமைச்சராக இருந்தவா், ஆனால் இந்த விவகாரத்தில் திமுகவை கண்டிக்கவில்லை. நிா்வாகிகள் அனைவரும் அதிமுகவுக்கு சரியான தலைமையே தோந்தெடுத்திருக்கிறோம். காலை உணவு திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சி முடியும் தருவாயில் சென்னையில் தொடங்கி வைத்தாா். ஆட்சிக்கு வந்திருந்தால் தொடா்ந்து தமிழகம் முழுவதும் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும்.

இப்போது ஸ்டாலின் ஐரோப்பா, ஆஸ்திரேலியாவை பாா்த்து ஆரம்பித்தேன் என்கிறாா். பசியை போக்குவது தான் எனது வாழ்வின் லட்சியம் என ஸ்டாலின் கூறுகிறாா். உண்மையில் பசியை போக்கியது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தான். சத்துணவுத் திட்டம், விலையில்லா அரிசி திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்து மக்களின் பசியை அவர்கள் தான் போக்கினார்கள் என்றும் அவர் அப்போது பேசினார்.

Previous articleஇது மட்டும் நடந்து விட்டால் அதிமுகவுக்கு அரசியலே இல்லை! அடுத்து சிறை தான் – டெல்லியில் கிடைத்த அலெர்ட்
Next articleதொடர்ந்து விபத்து நடக்கும் அவலம்! கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்!