விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்!

0
623
#image_title

விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்!

நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டது. இதனால் ஆளும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

ஜூலை 10 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அதிமுக தேர்தலை புறக்கணித்து விட்டதால் திமுக சுலபமாக வெற்றி பெற்று விடும் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

அதே நேரத்தில் நம் அனைவருக்கும் பொதுவான எதிரி திமுக தான் அதனால் தேர்தலை புறக்கணித்த அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என சீமான் வெளிப்படையாக பேசியுள்ளார். அதே போல பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ் பொதுவான எதிரியான திமுகவை வீழ்த்த அதிமுகவுக்கு அடுத்து பாமகவுக்கு தான் வாக்கு வங்கி உள்ளது. அதனால் அதிமுக தொண்டர்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியை விட ஒரு படி மேலே சென்ற பாமகவின் நிர்வாகிகள் அவர்களது பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்களை பயன்படுத்தி வாக்கு சேகரித்துள்ளனர்.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அவர், ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்தி வாக்கு கேட்டால் அது எங்களுக்கு பெருமையே என எதிர்ப்பு எதும் தெரிவிக்காமல் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

அடுத்ததாக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவருமான சி.வி. சண்முகம் பெயரில் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என சமூக வலைத்தளங்களில் போலித் தகவல் பரவியது. இதை கவனித்த அதிமுக தரப்பு உடனடியாக மறுப்பு தெரிவித்து இது குறித்து அவருடைய ஆதரவாளர் மூலமாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதே போல அதிமுக தேர்தல் புறக்கணிப்பு என்பது கட்சியின் முடிவு எனவும், தொண்டர்கள் வாக்களிப்பதில் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை எனவும். இரண்டாவது கிரீன் சிக்னல் அதிமுக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் பாமகவுக்கு ஆதரவாக இருப்பதால் அதிமுக தலைமை மறைமுகமாக பாமகவுக்கு ஆதரவு அளித்துள்ளது போன்றே தெரிகிறது.

முக்கியமாக கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் அதற்கு முந்திய எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர என அனைத்திலும் பாமகவினர் பங்கு அதிகமாகவே உள்ளது. அதே போல இப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவை மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர வைக்க இது ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது.

ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளிப்பதால் எதிர்காலத்தில் அதிமுகவுக்கு எந்த பயனும் ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் அதிமுகவினர் பெரும்பாலும் பாமகவுக்கு வாக்களிக்கவே தலைமை சிக்னல் கொடுத்துள்ளதாக கருதப்படுகிறது.மேலும் திமுக மற்றும் அதிமுகவை அடுத்து பாமக தான் இங்கு அதிக வாக்கு வங்கியை வைத்துள்ளது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாமக வாக்குகள் சேர்ந்தால் நிச்சயம் திமுகவை வீழ்த்த முடியும் என இரு கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் பேசி வருகின்றனர். இதையெல்லாம் வைத்து பார்த்தால் அதிமுகவின் பெரும்பாலான வாக்குகள் பாமக பக்கம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleFLASH: காலி மதுபான பாட்டிலுக்கு 7 கோடி வரை பணம்!! டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!
Next articleபகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை