நமது வீட்டின் பூஜை அறையிலோ அல்லது கோவிலுக்கு சென்றோ கடவுளை வணங்கும் பொழுது ஒரு சிலருக்கு கண்களில் இருந்து கண்ணீர் வருவதுண்டு. அதற்கான காரணம் என்ன…? அவ்வாறு வருவது நல்லதா கெட்டதா? என்பது குறித்து காண்போம்.
இந்த உலகத்தில் நமக்கு துன்பம் வருகிற பொழுது கண்களில் இருந்து கண்ணீர் வருவது இயற்கையான ஒன்று. அதேபோல இன்பம் வருகிற பொழுதும் கண்களில் இருந்து கண்ணீர் வருவதும் இயற்கையான ஒன்றே. ஆனால் இந்த இரண்டு காரணங்களையும் தவிர்த்து இறைவனின் சன்னதிக்கு போகும் பொழுது காரணமே தெரியாமல் வருகின்ற கண்ணீரானது எதற்கு வருகிறது என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.
ஒரு சில தெய்வங்களை காணும் பொழுது மட்டும் அதாவது காரணமே இல்லாமல், அழவேண்டும் என்று தோணாமலும் கூட கண்ணீர் வருகிறது என்று பலரும் கூறுகின்றனர். ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவானது எவ்வளவு புனிதமானது என்று அனைவரும் அறிவர். அதேபோன்றுதான் ஒருவருக்கு ஒரு தெய்வத்தை காணும் பொழுது கண்ணீர் வருகிறது என்றால் அவ்விடத்தில் உரிமை உள்ளது என்று அர்த்தம்.
இவ்வுலகில் இறைவன் தாயாகவும், அவர் முன்பு மக்கள் அனைவரும் குழந்தையாகவுமே இருக்கிறோம். குழந்தையாகிய நாம் தாயின் முன்பு சென்று நிற்கும் போது ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படுகிறது. எந்த தெய்வத்தின் இடத்தில் நமக்கு கண்ணீர் வருகிறதோ அந்த தெய்வத்திடம் நமக்கு உரிமை உள்ளதாக அர்த்தம்.
நமக்கு உரிமை உள்ள தெய்வத்தை காணும் பொழுது ஒன்று இன்பத்தின் உச்சியில் கண்ணீர் வரும் அப்படி இல்லை என்றால் துன்பத்தின் உச்சத்தில் கண்ணீர் வரும். உரிமை உள்ளவர்களிடம் மட்டுமே நாம் கண்ணீர் விட்டு நமது துன்பம் மற்றும் இன்பத்தை பகிர்ந்து கொள்ள முடியும்.
எந்த ஒருவரிடத்தில் நாம் அதீத அன்பை கொண்டுள்ளோமோ அந்த அன்பை வெளிகாட்டவும் நம் கண்களில் இருந்து கண்ணீர் வரும். எனவே எங்கே அன்பு இருக்கிறதோ எங்கே உரிமை இருக்கிறதோ அங்கு மட்டுமே நம் கண்களில் இருந்து கண்ணீர் வரும். எனவே கடவுளின் முன்பு கண்ணீர் வருகிறது என்பது ஒரு தவறான செயலே கிடையாது. அது மிகவும் நல்லதற்கே மற்றும் சந்தோஷப்படக்கூடிய ஒன்றாகவும் உள்ளது என்று ஜோதிடர் தேச மங்கையர்கரசி அவர்கள் கூறியுள்ளார்.