இந்த உலகில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிகமான கடமைகளும், பொறுப்புகளும் அதனை மேற்கொள்வதால் ஏற்படும் வலிகளும் அதிகம். அதாவது ஒரு பெண் திருமணமான பின்பு குழந்தைகளைப் பெற்றெடுத்து குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷனை செய்த பின்னரும் கூட அந்த மாதவிடாய் என்னும் பிரச்சனை பெண்களை விடுவதில்லை.
பெண்கள் ஒரு 35 வயதை தாண்டிய பிறகும் அந்த மாதவிடாய் பிரச்சனை அதிகரித்து அதாவது கர்ப்பப்பையில் பிரச்சனை ஏற்பட்டு வலிகளுடன் கூடிய மாதவிடாய் தோன்றி அது கர்ப்பப்பையை எடுக்கக்கூடிய வாய்ப்பினை தேடித் தந்து விடுகிறது. அவ்வாறு கர்ப்பப்பையை எடுத்து விட்டால் பல பிரச்சனைகள் ஏற்படுமோ என்று பலரும் பயந்து இருக்கின்றனர். அதற்கான விளக்கத்தினை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எல்லாவிதமான மருந்துகளும், ஊசிகளும் பயன்படுத்திய பின்னரும் கர்ப்பப்பையில் பிரச்சனை தொடர்கிறது என்றால் மட்டுமே இந்த கர்ப்பப்பையை நீக்குவதற்கான வழியை மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
கர்ப்பபை என்பது குழந்தையை உருவாக்கி 10 மாதங்கள் அதற்கான வளர்ச்சியை கொடுத்து தருவதும், மாதவிடாயை ஏற்படுத்தித் தருவதும் ஆகும். கர்ப்பப்பைக்கு இருபுறமும் இரண்டு முட்டை பைகள் இருக்கும். இந்த முட்டை பையில் இருந்து வரக்கூடிய ஹார்மோன்கள் தான் பெண்களின் இதயம் மற்றும் எலும்புகளுக்கு தேவையான முக்கியமான ஹார்மோன்களை தருகிறது.
கர்ப்பப்பையை நீக்கினாலும் கூட இந்த முட்டை பைகள் நமக்கு தேவையான ஹார்மோன்களை வழங்குவதால் நமது உடலுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படாது. எனவே ஒரு 45 வயதுக்கு மேல் இந்த கர்ப்பப்பையை எடுத்தால் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் அந்த வயதில்தான் அதாவது 40 முதல் 50 வயது வரை பெண்களுக்கான மாதவிடாய் இயற்கையாகவே நிற்கக்கூடிய வயது. எனவே அந்த காலகட்டத்தில் கர்ப்பப்பையை எடுக்கும் பொழுது பாதிப்பு ஏற்படாது.
முட்டை பைகளை அதாவது சினைப்பை எடுத்தால் மட்டுமே சற்று கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பப்பையை எடுப்பதினால் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது. அவ்வாறு சினை பைகளும் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் கூட HRT என்று சொல்லக்கூடிய ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு சினைப்பைகள் எடுத்து HRT கொடுக்க விட்டால் அவர்களுக்கு ஹார்மோனின் அளவு திடீரென குறைந்து ஒரு விதமான படபடப்பு, மயக்கம், தலை சுற்றல், வியர்த்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே கர்ப்பப்பை ஆபரேஷன் செய்யும் பெண்கள் மருத்துவரிடம் கலந்தாய்வு செய்ய வேண்டும். கர்ப்பப்பையை மட்டும் அகற்ற போகிறீர்களா அல்லது சினைப்பையும் சேர்ந்து அகற்ற போகிறீர்களா என்று கலந்தாலோசித்து அதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஏனென்றால் நமது உடலில் உள்ள பிரச்சனைகளை ஆய்வு செய்து அறிந்தவர்கள் மருத்துவர்கள் தான். எனவே மருத்துவரிடம் முன்கூட்டியே அதற்கான விடையை தெரிந்து கொள்வது நல்லது.