காபூல் :
ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதில் ஆப்கான் ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் அண்மையில் அந்நாட்டைவிட்டு வெளியேறின.
இதனை தங்களுக்கு சதகமாக்கிக்கொண்ட தலீபான் பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கி கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்நிலையில் தலீபான் பயங்கரவாதிகள் தலைநகர் காபூலை கைப்பற்றியதும் நாட்டு மக்களை பற்றி எவ்வித கவலையும் கொள்ளாமல் அதிபர் அஷ்ரப் கனி மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிக் கொண்டு தனது மனைவியுடன் அண்டை நாட்டுக்கு தப்பி ஓடியது அனைவராலும் பரவலாக பேசப்பட்டது.
மேலும் அவர் 4 கார்களில் எடுத்து வந்த பணத்தை ஹெலிகாப்டர் முழுவதும் நிரப்பிய பின்னரும் ஏராளமான பணம் மிஞ்சியிருந்தாகவும்,அந்த மிஞ்சிய பணங்களை அவர் சாலையில் வீசி சென்றதாகவும் அந்த சமயத்தில் பரபரப்பு தகவல்கள் பல வெளியாகின.
அதிபரை போலவே மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், மூத்த அரசு அதிகாரிகள் என பலரும் தாங்கள் இதுவரை சேர்த்து வைத்திருந்த பணம், நகை உள்ளிட்ட அனைத்தையும் சுருட்டிக் கொண்டு உடனடியாக நாட்டை விட்டு வெளியேறினர்.
2 கோடிக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் மக்கள் தலீபான்களின் ஆட்சியில் வறுமையையும் ஒடுக்குமுறையையும் எதிர்கொண்டு வரும் வேளையில் அவர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு பதவிக்கு வந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் தங்கள் குடும்பத்தோடு அயல்நாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
இதை வெளியுலகத்துக்கு படம் பிடித்து காட்டும் விதமாக ஆப்கான் முன்னாள் ராணுவ மந்திரியின் மகன் அமெரிக்காவில் ரூ.157 கோடிக்கு ஆடம்பரமான மாளிகை ஒன்றினை விலைக்கு வாங்கியிருக்கும் தகவல் தற்போது கசிந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவ மந்திரியான அப்துல் ரஹீம் வர்தாக்கின் மகன் தவூத் வர்தாக்(45).இவர்தான் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் 20.9 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.157 கோடியே 43 லட்சத்து 86 ஆயிரம்) கொடுத்து ஆடம்பர மாளிகையை வாங்கியுள்ளார்.
9 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மாளிகையில் 5 படுக்கையறைகள், 7 குளியலறைகள், நீச்சல் குளம், மாளிகை முழுவதும் கண்ணாடி சுவர்கள் என சகல வசதிகளும் உள்ளன.ஏற்கனவே இவருக்கு மியாமி கடற்கரைக்கு அருகே 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.39 கோடி) மதிப்புடைய சொகுசு பங்களா ஒன்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.