எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்குகிறது.
சென்னை வானகரத்தில் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அதிரடியாக நீக்கப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற அறிவுறுத்தலினடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு சென்ற 10ம் தேதி மற்றும் 11ஆம் தேதி உள்ளிட்ட இரு நாட்களில் விசாரிக்கப்பட்டது.
பொதுக்குழு தொடர்ப பொதுக்குழு தொடர்பாக ஜூன் மாதம் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது எனவும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியானதன் காரணமாக, தலைமை கழக நிர்வாகிகள் மூலமாக நோட்டிஸ் அனுப்பப்பட்டதாகவும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் செய்தது.
ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்காலம் 5 வருடங்களாக இருக்கும்போது ஒரு வருடத்திற்கு முன்னரே எப்படி பதவி காலாவதியானது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடந்த 2017 ஆம் வருடம் நியமனத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள இயலாது எனவும், ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு பொது குழு வழங்காததால் பதவி காலாவதியாகிவிட்டதாகவும், தெரிவித்தது.
2,432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கடிதம் வழங்கியுள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் செய்தது.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு ஒப்புதல் வழங்காவிட்டால் பதவிகள் காலாவதியாகி விடும் என்று எந்தவிதமான தீர்மானத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று பன்னீர்செல்வம் தரப்பு வாதம் செய்தது.
அதோடு பொதுக்குழு தீர்மானத்திலும் இல்லை என்று பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்தது. மேலும் பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை தொண்டர்களின் விருப்பமாக கருத இயலாது என்று தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியிடப்படவுள்ளது.