ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், ரஷ்யா தங்களது நாட்டில் உள்ள உள்ளூர் விமான சேவைகளுக்காக இந்தியாவிடம், இந்தியாவின் விமான சேவை நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களை கேட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ரஷ்யா உக்ரைன் போர் தான். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து கொண்டிருப்பதால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் மீதும் ரசியர்கள் மீதும் தடை விதித்துள்ளது.இதனால் விமான சேவை இன்றி கஷ்டப்படும் ரஷ்யா இந்தியாவிடம் உதவி கோரி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பொருளாதார நெருக்கடியை கொடுப்பதன் மூலம் ரஷ்யா தனது முடிவிலிருந்து பின்வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஷ்யா அதற்கான மாற்று வழிகளை யோசித்து வருகிறது. இந்த ரஷ்ய அரசின் நடவடிக்கைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை கோபமடைய செய்வதாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும், எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் ரஷ்யா இது தொடர்பாக சீனா , இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியை நாடியது தெரியவந்துள்ளது.இதன்படி இந்தியா, சீனாவை சேர்ந்த விமான சேவை வழங்கக்கூடிய நிறுவனங்கள் ரஷ்ய வான் வெளியில் சுதந்திரமாக செயல்படலாம் அதேபோல நீர் வழி மற்றும் பிற போக்குவரத்து முறைகளிலும் சுதந்திரமாக செயல்பட முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த சலுகைகளை ஏற்றுக்கொள்ள இந்திய விமான சேவை நிறுவனங்கள் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், விமான சேவையை பொறுத்தவரை நிறுவனங்கள் அவ்வப்போது விமான பாகங்களை மாற்ற வேண்டும், தங்களுடைய மென்பொருள்களை அப்டேட் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நடைமுறைகள் உள்ளன என்றும், தற்பொழுது எங்களுக்கே போதுமான விமான சேவைகள் இல்லை என்றும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.