அஜித்துக்கு கட்டுப்பாடு விதித்த ஃபெப்சி: ஆர் கே செல்வமணி உறுதி !
இனி அஜித் படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் நடக்கும் என தென்னிந்திய சினிமா தொழிலாளர்களின் சம்மேளனத் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அஜித் நடிக்கும் பெரும்பாலான படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் அல்லாமல் வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில்தான் நடந்து வருகிறது.
இதற்குக் காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால், அஜித் படத்தின் ஷூட்டிங்கை தமிழ்நாட்டில் வைத்தால் ரசிகர்களின் அன்புத்தொல்லைக்கு மத்தியில் நிம்மதியாக நடத்த முடியாது என்பதுதான். இந்த காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் என்றாலும் இதனால் சினிமா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
ஆந்திராவில் நடந்தால் பெரும்பாலும் அம்மாநில தொழிலாளர்களையே வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். இதனால் பெரும்பாலான நாட்களில் தமிழ் சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இப்போது தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர் ஆர் கே செல்வமணி விளக்கம் அளித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘அஜித்திடம் இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த சம்மதித்துள்ளார். மேலும் ஹைதராபாத்தில் நடக்கும் ரஜினி படத்தின் படப்பிடிப்பும் அடுத்த கட்டத்தில் இருந்து சென்னையில் நடக்கும்’ என சந்தோஷமான செய்தியை அறிவித்துள்ளார்.