ரஜினி, கமல், விஜய்க்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்
திமுக, அதிமுக ஆகிய இரண்டு மிகப்பெரிய திராவிட கட்சிகளை தேர்தல் அரசியலில் ஒரு புதிய கட்சியை சமாளிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாகும். அந்த சவாலை விஜயகாந்தின் கட்சி உட்பட எந்த கட்சியும் இதுவரை சமாளிக்க முடியவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை
சமீபத்தில் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் அவர்கள் இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார் என்று எண்ணிய நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது, இரண்டு திராவிட கட்சிகளுக்கு எதிரான மனநிலையில் உள்ள மக்களை அதிருப்தி அடைய வைத்தது. இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு புதிய கட்சியோ அல்லது கூட்டணியோ வராதா? என்று மக்கள் பலர் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை
இந்த நிலையில் அதிமுக, திமுக என இரண்டு பெரிய கூட்டணிகளை சமாளிக்க கமல், ரஜினி மற்றும் விஜய் ஆகிய மூன்று திரையுலக பிரபலங்கள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று கோலிவுட் பிரபலங்கள் வலியுறுத்தி வந்தனர். ஏற்கனவே திரை உலகிற்கு எதிராக தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை தற்போது தனி அதிகாரிகளின் கைகளில் சென்றுவிட்டதால் திரையுலகினர் எந்த ஒரு புதிய முடிவையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலை இனி நீடிக்காமல் இருக்க திரையுலகைச் சேர்ந்த ஒருவர் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் திரையுலகினர் இடையே உள்ளது
இதனை அடுத்து ரஜினி, கமல் இருவரும் இணைந்து செயல்படுவது என்ற முடிவை எடுத்திருப்பதாகவும் இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்டால் விஜய் இந்த கூட்டணிக்கு பகிரங்கமாக ஆதரவு தருவதோடு ஒரு சில முக்கிய இடங்களில் பிரச்சாரமும் செய்வார் என்றும் கூறப்படுகிறது
ரஜினி, கமல், விஜய் ஆகிய மூன்று மாஸ் நடிகர்கள் தேர்தல் அரசியல் களத்தில் இறங்கினால் நிச்சயம் இரண்டு திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி விடலாம் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது
இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் இன்று அளித்த பேட்டியில் ’ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? நடிகர் அஜித் அவர்கள் வரக்கூடாதா? மக்களுக்கு இடையறாது தொண்டு ஆற்றுகின்ற அதிமுகவுக்கு விசுவாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம் என்று கூறியுள்ளார்
இதிலிருந்து ரஜினி, கமல், விஜய் கூட்டணி ஏற்பட்டால் அவர்களுக்கு எதிராக அஜித்தை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அஜித் ஏற்கனவே அதிமுகவின் அபிமானி என்பதும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி என்பதும் குறிப்பிடத்தக்கது